கல்யாணம் பண்ணிட்டீங்களா இன்னும் இல்லையா - ஒரு ஃபீலிங் ஸ்டேட்மென்ட்



என் நண்பர் ஒருவர் ஏதாவது இளைஞர்களை சந்தித்தால் அவரைப் பற்றி நலம் விசாரிக்கிறாரோ இல்லையோ கல்யாணம் பண்ணிட்டீங்களா என்றுதான் முதலில் கேட்பார். என்னடா இது வம்பாப் போச்சு இந்த மனுசன் இப்படி எடுத்த எடுப்பிலேயே இப்படி கேக்குறாரே என்றுதான் யாருக்குமே நினைக்க தோன்றும். அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் என் நண்பரிடம் ‘உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா...?’ என்று கேட்டால், இல்லை என்னும் பதில்தான் அவரிடம் இருந்து வரும். நீங்கள் உடனே கேட்கலாம், என்ன, கல்யாணம் ஆகாமலே மத்தவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா என்று கேட்கிறாரே என்று... அதுதான் என் நண்பன். தனக்குத்தான் இன்னமும் கல்யாணம் ஆகலை... மத்தவங்களாவது சீக்கிரம் பண்ணட்டுமே என்கிற நல்ல எண்ணம்தான் அது.

என் நண்பருக்கு இன்றைய தேதியில் கொஞ்சம் வயது அதிகம் ஆகிவிட்டது. அதனால் பெண் கிடைப்பதில் சிரமமாகிவிட்டது. ஆனால், அன்றோ அவர் இன்னும் நான் செட்டில் ஆகணும்... நல்லா சம்பாதிக்கணும்... அப்புறம்தான் கல்யாணம் என்றுதான் சொல்லிக் கொண்டே வந்தார். கடைசியில் நல்லா சம்பாதிச்சார். செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இளமை என்றும் காத்துக் கொண்டிருக்குமா என்ன? இப்போது சுகர், பிபி என்று எல்லா கழுதைகளும் அவரோடு வந்து ஒட்டிக் கொண்டுவிட்டன. இத்தனைக்கும் அவர் வயது முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையில்தான்.

‘திருமணத்திற்கு அரசாங்கமே குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருந்தாலும் ஆண்களைப் பொறுத்தவரை 25-29க்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. மனது அலைபாய்வது கொஞ்சம் குறையும். இதனால் தொழில் அல்லது வேலை போன்ற ஏதாவது ஒன்றில் மனதை முழுமையாக செலுத்த இயலும். இல்லாவிட்டால் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் வாழ்க்கை வெறுத்துப் போய்விடும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ்ந்து விட முடியும். ஆனால் ஒரு ஆணால் அது சாத்தியம் அல்ல. முப்பது வயதுக்கும் மேல் தனியாக வாழும் இளைஞர்கள் இன்றைய சமுதாயத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை. 25-29க்குள் திருமணம் செய்து உங்கள் வயது 50 இருக்கும் போது உங்கள் மகனோ மகளோ கல்லூரி முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல தயாராகிவிடுவார்கள். உங்கள் பாராம் கொஞ்சம் குறையும். நீங்கள் தாமதமாக திருமணம் செய்தால் எல்லாமே லேட்டாகிக் கொண்டே போகும்...’

இதெல்லாம் என் நண்பர் 30 ஆகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சகோதரர்களுக்கு சொன்னவை. ஆகவே சகோதரர்களே உடனே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிற வழியைப் பாருங்கள்.
hotlinksin

0 Responses to “கல்யாணம் பண்ணிட்டீங்களா இன்னும் இல்லையா - ஒரு ஃபீலிங் ஸ்டேட்மென்ட்”

Post a Comment