தேவதைகள் முட்டாள்கள் - செல்வராகவன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்
சில வருடங்களுக்கு முன்பு 7ஜி ரெயின்போ காலனி படம் வந்த சமயம் என்று நினைக்கிறேன். அப்போது வார இதழ் ஒன்றில் செல்வராகவன் பேட்டி ஒன்று படித்தேன். அதில் ‘தேவதைகள் முட்டாள்கள்’ என்பதை செல்வராகவன் சொல்வது போல போட்டிருந்தார்கள். தேவதைகளை ஏன் இப்படி திட்டி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே பேட்டியைப் படிக்க ஆரம்பித்தேன்.
செல்வராகவன் +1 படித்துக் கொண்டிருந்த போது, ஒன் சைடாக ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தாராம். அந்த பெண் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பாளாம். அவள் +2 படித்துக் கொண்டிருந்தாளாம். செல்வராகவனை விட கிட்டத்தட்ட 2 வயது பெரியவளாம். தன் காதலை, பல நாட்களாக அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செல்வராகவனால் அவளிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் அவள் வீட்டினர் செல்வராகவனது வீட்டுக்கும் பக்கத்து வீட்டில்தான் குடியிருந்தார்களாம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வராகவன் மனதில் பத்து லட்சம் பட்டாம் பூச்சுகள் பறக்கும். அவள் வரும் போது அந்த ஏரியாவே தேசிய கீதம் பாடுவது போல இருக்குமாம் செல்வராகவனுக்கு.
ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்த போது அவளை அப்படியே கட்டிப் பிடித்துவிட்டாராம் செல்வராகவன். அவளோ கோபப்படாமல் அவரை அப்படியே அணைத்துக் கொண்டாள். ‘நீ எக்ஸாம்ல பெயிலாகிட்டன்னு உங்க அம்மா சொன்னாங்க... எந்த டவுட் இருந்தாலும் என்கிட்ட கேளு... அதுக்காக பீல் பண்ணக் கூடாது... சரியா...’ என்று சொல்லி அவரை தேற்றுவது போல் பேசியிருக்கிறாள். அப்போது வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டதாம் செல்வராகவனுக்கு.
அதன் பிறகு செல்வராகவன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாலும் அவளை மட்டும் மறக்கவே முடியவில்லையாம். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த தேவதை பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயம் அவருக்கு அதிர்ச்சியாவே இருந்திருக்கிறது. அவர் ஒன்சைடாக நேசித்த அந்த தேவதை, யாரோ ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாளாம். அந்த பையனோ சுத்த பொறுக்கியாம். ஒழுங்காக குளிக்காமல் வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டே இருப்பானாம். ‘அவனிடம் அப்படி என்னதான் அவளுக்கு பிடித்திருந்ததோ... இப்படி ஒரு வெட்டிப் பயலுடன் ஓடிப் போய்விட்டாளே... அவள் தேவதைதான்... தேவதைகள் முட்டாள்கள்...‘ என்று சொல்லியிருந்தார். வெட்டிப் பயலுடன் ஓடிப் போனாள் என்றால் அந்த தேவதை நிச்சயம் முட்டாளாகத்தான் இருந்திருப்பாள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தேவதைகள் முட்டாள்கள் - செல்வராகவன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்”
Post a Comment