என் மனதைக் குத்திக் கிழித்த படம் ‘பச்சை என்கிற காத்து’
தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் படமோ அதன் காட்சிகளே உங்கள் மனதை விட்டு அகல மறுத்தால் அந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் வெயிட்டாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு படமாகத்தான் இருக்கிறது பச்சை என்கிற காத்து. படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் படத்தின் தாக்கம் நம் மனதை விட்டு அகல நாட்கள் சில பிடிக்கும் போலிருக்கிறது.
பள்ளிக்கூடம் போகிற டீன் ஏஜ் வயதில் அரசியல் ஆசையில் அரசியலுக்குள் நுழைகிற ஒரு இளைஞன் பின்நாளில் அந்த அரசியல் காரணமாகவே அவன் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை சொல்கிறது பச்சை என்கிற காத்து.
சாவு வீட்டில் ஒரு நீள ஒப்பாரியுடன் படம் ஆரம்பிக்கும் போது, பார்க்கிற நமக்கு என்னடா இது இப்படி ஆரம்பிக்கிறாங்களே... என்று தோன்றுகிறது. அடுத்த சில நிமிடங்களில் கதாநாயகன் அறிமுகமாக, அதன் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு சுவாரஸ்யம். இடைவேளை வரைக்கும் பரபரவென நகரும் திரைக்கதையுடன் பறக்கிறது படம். கதாநாயகன் பச்சை அடிக்கிற ஒவ்வொரு கமென்ட்டும் கலக்கல். வசனம் அவ்வளவு ஷார்ப். கட்சியில் சேர்ந்ததுமே வேஷ்டி கட்டிக் கொண்டு பச்சை அடிக்கிற அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்க்கிறது. இந்த அதிர்வு இடைவேளை வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காதலியை பார்க்க பெண்கள் பள்ளிக்கூடத்தின் உள்ளே காவலாளியையும் மீறி சாதாரணமாக நுழையும் பச்சையிடம் ஆசிரியைகள் ஓடி வந்து பதறியபடி கேட்கும் போது பச்சை சமாளிக்கிற விதம் இருக்கிறதே. அடடா... இது போன்று பச்சை வரும் ஒவ்வொரு காட்சிகளும் எழுந்து நின்று கைத்தட்டத் தோன்றுகிறது.
இடைவேளைக்குப் பிறகு முழுமையான கதைக்குள் பயணப்படுகிறது படம். எந்த பிரச்சினையையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் பச்சையை நமக்கு ரொம்பவே பிடித்துப் போய்விடுகிறது. அவன் செய்யும் சில வேலைகள் ஒரு மாதிரியாகவே இருந்தாலும் நம்மை ரொம்பவே ரசிக்க வைத்துவிடுகிறான் பச்சை.
பச்சையாக நடித்திருக்கிறார் ‘வாசகர்’ என்னும் அறிமுக நடிகர். உதவி இயக்குநராக இருந்தவரை பச்சை என்கிற காத்து படத்தின் இயக்குநர் கீரா நடிக்க அழைத்து வந்துவிட்டார். பச்சை கேரக்டரை வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். அவ்வளவு அழகாக பண்ணியிருக்கிறார் நடிகர் வாசகர். இவர் நடிப்பைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
இவருக்கு ஜோடியாக செல்வி என்னும் கேரக்டரில் மலையாள நடிகை ‘தேவதை’. பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்கிறார் இந்த தேவதை. செல்வி கேரக்டரிலும் அவர் தங்கை கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் இவர் முகத்தில் இருக்கும் குரூரம்... நம்மை பயப்படவும் வைக்கிறது.
காதாநாயகனின் அப்பா, அம்மா, பாட்டி, கதாநாயகியின் பாட்டி, அப்பா, ஹீரோவின் நண்பன், பெரியவர் என எல்லோரும் நடிப்பில் அக்மார்க் முத்திரை பதிக்கிறார்கள்.
பாடல்களுக்கு இசை ஹரிபாபு. பின்னணி இசையில் மட்டுமல்லாமல் பாடல்களிலும் கலக்கியிருக்கிறார்கள். முதல் பாடலாக வரும் ‘மீசையில்லா சூரப்புலி’ பாடல் நம்மை சீட்டோடு கட்டிப் போட்டுவிடுகிறது. பாடலுக்கான குரல் இன்னும் அருமை. காட்சிகளையும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். ‘உன்னை நான் பார்த்தேன்...’ தீயே... பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன.
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. இடைவேளைக்குப் பின்பு வரும் சில காட்சிகளில் எடிட்டர் கொஞ்சம் கை வைத்திருக்கலாம்.
பச்சை என்கிற காத்து படத்தை இயக்கியிருப்பவர் தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார். அதனால்தான் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் படத்தை அவ்வளவு தூரம் ரசிக்கிறார்கள் என்பது புரிகிறது. திரைக்கதை, காட்சி வடிவமைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு கதையை புதுமுகங்களை வைத்து நடிக்க வைக்க அதுவும் தான் எதிர்பார்த்த நடிப்பை திரையில் கொண்டு வர அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அது இருந்ததால்தான் கீராவால் இப்படி ஒரு காவியத்தை திரையில் எழுத முடிந்திருக்கிறது. பச்சை என்கிற காத்து படத்தின் மூலம் தான் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப் பட வேண்டிய இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் கீரா.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “என் மனதைக் குத்திக் கிழித்த படம் ‘பச்சை என்கிற காத்து’”
Post a Comment