துள்ளுவதோ இளமை + மயக்கம் என்ன = '3' - விமர்சனம்






இரண்டு படங்களிலிருந்து கதைகளை எடுத்து ஒரு படம்தானே பண்ண முடியும்; ஆனால் 3 படம் பண்ண  முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்திருந்தால், துள்ளுவதோ இளமை படத்தின் முதல் பாதியையும் மயக்கம் என்ன படத்தின் இரண்டாவது பாதியையும் சேர்த்துப் பாருங்கள்... அடடே... அதுதான் 3 படத்தின் கதை... 3 படத்தை இயக்குவதற்கு முன்பு செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் சவுந்தர்யா. அந்த நேரத்தில் பேசாமல் செல்வராகவனின் மற்ற படங்களையும் பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் கலவையாக கிடைத்திருக்கும் 3.

இனி 3 படத்தின் கதையைப் பார்ப்போம். ராம், +2 படிக்கும் வசதியான வீட்டுப் பையன். ஒருநாள் மழையில் நனைந்து கொண்டே பைக்கில் பள்ளிக்கூடம் போகும் போது, கதாநாயகி ஜனனியைப் பார்க்கிறான். சைக்கிள் செயின் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய அவள் படாத பாடுபடுகிறாள். இதைப் பார்க்கும் ராம், ஹீரோவாச்சே... உடனே ஓடிப்போய் உதவி பண்ணுகிறார். அதன்பிறகு அவள் பள்ளி சீருடையை வைத்தே எந்த பள்ளிக்கூடம் என்பதை கண்டறிந்து அங்கிருந்து அவள் ட்டியூசன் போகும் வழியில் மட்டுமின்றி வீடு வரும் வரை காவல்காரன் வேலை பார்க்கிறார் ராம். தான் காதலிப்பதை ராம் ஜனனியிடம் சொல்ல, அப்புறம் அவளும் காதலை ஏற்றுக் கொள்கிறாள். கல்யாணம்... தனிக்குடித்தனம் என்று போகும் ராம் - ஜனனி, வாழ்க்கையில் ராமிடம் திடீரென வந்து குடி கொள்கிறது மனவியாதி. அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சூறாவளி வீசுகிறது என்பது கதை.

இப்ப புரிஞ்சிருக்குமே... ஏன் துள்ளுவதோ இளமை படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் வம்புக்கு இழுத்தோம் என்று. 

இயக்குநர் ஐஸ்வர்யாவை ஒரு விஷயத்தில் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் க்ளைமேக்ஸை முதலிலேயே வைத்துவிட்டார். அதாவது தனுஷ் தற்கொலை செய்து கொள்வதை. இதற்கு என்ன காரணம் என்றால், படத்தின் முற்பகுதி கலகலப்பாக போனாலும் அடுத்த பாதியில் படம் அடித்து தூக்கி நிறுத்தினாலும், படுத்துவிடுகிறது. இந்த மாதிரி போர் அடிக்கிற நேரத்தில் வெறுப்பில் சிலர் தியேட்டரை விட்டு வெளியேறி விடுவார்கள். ஒருவேளை அப்படி யாராவது போய்விட்டால் படம் பார்க்கும் யாருக்கும் க்ளைமேக்ஸ் பார்க்கவில்லையே என்ற எண்ணம் வரக்கூடாது அல்லவா... அதனால் முன்னெச்சரிக்கையாக ஐஸ்வர்யா க்ளைமேக்ஸை முதலிலேயே வைத்துவிட்டார்.

பள்ளி மாணவனாக வரும் தனுஷ் அவருடன் நண்பனாக வரும் சிவகார்த்திகேயன் இருவருமே படத்தின் இடைவேளை வரை செம கலாட்டா பண்ணுகிறார்கள். சிவகார்த்திகேயன் அவ்வப்போது அடிக்கும் டைமிங் காமெடிக்கு திரையரங்கமே அதிருகிறது. இதனால் இடைவேளை வரை படம் நகர்வதே தெரியவில்லை. ஆனால், இடைவேளைக்கு அப்புறம்தான் சனி தியேட்டர் திரையில் வந்து உட்கார்ந்து விடுகிறது. மனவியாதியால் பாதிக்கப்பட்ட தனுஷை அவர் நண்பர் மருத்துவமனைக்கு அழைப்பதும், தனுஷ் மறுப்பதும், பின்பு மருத்துவமனைக்கு போவதும் இப்படியே காட்சிகள் கடந்து கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட டிராமா மாதிரி. இதைவிட்டால் ஸ்ருதி அழுவதை காட்டுகிறார்கள். அதுவும் க்ளோஸ் ஷாட்டில் அழுகை அழுகை... ஒரே அழுகையாக அழுகிறது பொண்ணு. நிஜ வாழ்க்கையில் புருஷன் செத்தா கூட இப்படி அழமாட்டங்க. அதை விட ஓவராக அழுகிறார். படம் முடியும் போது இவர் அழும் காட்சிகளில் தியேட்டரில் ரசிகர்கள் பீல் பண்ணுவதற்கு பதிலாக சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஸ்ருதி நடிப்பில் நன்றாகவே இம்ப்ரஸ் பண்ணுகிறார். இவர் ராம் ராம் என்று தனுஷை கூப்பிடும் காட்சிகள் அவ்வளவு அழகு. தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் இவர் கூப்பிடும் ராம் ராம்... என்பது மட்டும் மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டே இருப்பது போல் ஒரு ஃபீல். என்ன... ஸ்ருதியை கொஞ்சம் கண்ணீர் குறைச்சலா சிந்த விட்டிருக்கலாம்.

தனுஷின் அப்பாவாக வரும் பிரபு. எப்போது பார்த்தாலும் ஃபைலில் ஏதோ எழுதியபடியே இருக்கிறார். அம்மாவாக வருகிறார் பானுப்ரியா. 


மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய கொலைவெறி பாடலை கடற்கரையில் தனுஷ் டீமை ஆடவிட்டு ஒப்பேத்தியிருக்கிறார்கள்.

படத்தின் இடைவேளை வரைக்கும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கிறார் எடிட்டார். இடைவேளைக்கு பிறகு அவருக்கு தெரியாமல் வேறு யாரோ எடிட்டிங் வேலை பார்த்துவிட்டார்கள் போலும்.

கார் பார்க்கிங் ஏரியாவில் வைத்து நடைபெறும் அந்த சண்டை காட்சி பலே ரகம். சபாஷ் போட வைக்கிறது. அதுவும் தனுஷின் தலையை ஒருவன் பிடித்து கார் பேனட்டில் அடிக்க திருப்பி தனுஷே அதை போன்று அடித்துக் காட்டும் போது... சூப்பர் சீன். இது போன்று சின்ன சின்ன ஆனால் ரசிக்கிற மாதிரியான காட்சிகள் எக்கச்சக்கமாக இருந்த போதிலும் இடைவேளைக்கு பின்னர் வரும் தனுஷின் மனவியாதி சம்பந்தப்பட்ட வழ வழ காட்சிகள் படத்தை ஒரு திருப்தியில்லாமல் செய்துவிடுகின்றன.


படத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வருகிற நமக்கே தனுசுக்கு வந்தது போன்ற மனவியாதி வந்துவிடும் போல் இருக்கிறது... அப்படி இருக்கும் போது, இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு படத்தின் இயக்குநர், எடிட்டர், இசையமைப்பாளர் இவர்கள் எல்லாம் படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பார்கள்... அவர்கள் நிலைமை... நினைக்கும் போதே... கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.

hotlinksin

0 Responses to “துள்ளுவதோ இளமை + மயக்கம் என்ன = '3' - விமர்சனம்”

Post a Comment