மழைக்காலம் - விமர்சனம் (ரசிகர்களுக்கு இது போராத காலம்...)




இயக்குநர்கள் ஹீரோவை நம்பி படம் எடுப்பார்கள்... கதையை நம்புவார்கள்... இல்ல திரைக்கதையை நம்பி... அதுவும் இல்லன்னா படத்தில் ஏதோ ஒன்றை கண்டிப்பாக நம்பி படம் எடுப்பார்கள். மழைக்காலம் படத்தின் இயக்குநர் க்ளைமேக்ஸை நம்பி படம் எடுத்திருக்கிறார். ஒருத்தனை ரூம் போட்டு 2 மணி நேரம் அடிச்சு துவச்சிட்டு அப்புறமா கையில ஒரு சாக்லேட்டைக் கொடுத்து அனுப்புறது மாதிரிதான் இருக்கிறது இந்த மழைக்காலம் ட்ரீட்மென்ட்.

விஜய், கவின் கலைக் கல்லூரி மாணவியான ஷோபியாவை (சரண்யா) எதேச்சையாக சாலையில் பார்க்கிறான். அது பின்னர் ஆழமான நட்பாக உருவெடுக்கிறது. அவள் தன் அப்பாவையும் அண்ணனையும் ஒரு விபத்தில் இழந்ததை விஜய்யிடம் சொல்ல, அவள் மீது அவனுக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் விஜய் தன் அண்ணன் அண்ணியிடம் சொல்லி அவளை பொண்ணு கேட்க சொல்கிறான். அண்ணனும் அண்ணியும் ஷோபியா வீட்டில் போய் பெண் கேட்க, அவர்களிடம் தனக்கு திருமணமே தேவையில்லை... என்று கத்திவிடுகிறாள் ஷோபியா. இதன் காரணத்தையும் அவனிடம் சொல்ல மறுக்கிறாள் சோபியா. காரணத்தை சொல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று சொல்கிற விஜய்யிடம், திருமணத்தை மறுப்பதற்கான காரணத்தை சொல்லாமல் செய்தே காட்டுகிறாள் ஷோபியா. அதன் பிறகு அவன் காதல் என்னவாகிறது என்பது க்ளைமேக்ஸ்.

என்ன படிக்கும் போதே சப் என்று இருக்கிறதா...? பார்க்கும் போதும் அப்படித்தான் இருக்கிறது. படத்தில் க்ளைமேக்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கிறது என்ற காரணத்தால் மற்ற விஷயங்கள் எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். திரைக்கதை என்றால் என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கிறது படம் துவக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை. ஒவ்வொரு காட்சியும் பிட் பிட்டாக வந்து போகிறது. பிட்டு படத்தில கூட இதைவிட நல்லா சீன் சீக்வென்ஸ் வெச்சிருப்பாங்க... சொதப்பலான காட்சிகள் நம்மை வசப்படுத்துவற்கு பதிலாக எரிச்சலையும் சலிப்பையும் வர வைக்கின்றன.

காதாநாயகனாக புதுமுகம். இவருக்கு ஜோடியாக காதல் சரண்யா. இரண்டு பேரையும் பார்க்கும் போது சரண்யாவை அக்கா என்றும் ஹீரோவை தம்பி என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு சரண்யா முகத்தில் முதிர்ச்சி ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில் தம்பி நடிகரை... சாரி... ஹீரோவைப் பார்க்கும் போது நடுநிலைப் பள்ளி மாணவன் போல இருக்கிறார். நடிப்பதற்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லாத கேரக்டர் என்பதால் யாருமே மெனக்கெடாமல் நடித்துவிட்டுப் போகிறார். அந்த அண்ணி கேரக்டரில் வருகிற நடிகை மட்டும் அண்ணியாக நடிக்கச் சொன்னால் அம்மாவாகவே நடித்துவிடுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு நடிப்பை அள்ளித் தெளிக்கிறார்.

பின்னணி இசை தேவையே இல்லை என்று நினைத்துவிட்டார் இசையமைப்பாளர். சண்டைக்காட்சி, பாடல்கள் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் மியூட்தான். சர்ச்சில் ஹீரோவும்  ஹீரோயினும் போகிற போது, காரில் போகும் போது என அவ்வப்போது வந்து போகும் ஒரு மெல்லிய இசை மனதை வருடிவிட்டுப் போகிறது. காமெடிக்கு என கஞ்சா கருப்பு வந்து ரசிகர்களை சாகடிக்கிறார். காமெடி என்றால் பார்க்கிறவங்க சிரிக்கணும்... ஆனால் கஞ்சா கருப்புவோட காமெடியைப் பார்த்தால்... அழுகையே வருகிறது.

நல்ல காதல் கதை... ஸ்ட்ராங்கான க்ளைமேக்சுடன்... கைவசம் இருந்தால் அதை எப்படி திரைக்கதை அமைத்து பின்னி பெடலெடுக்கலாம்... ஆனால், மழைக்காலம் படத்தின் இயக்குநர் ரசிகர்களை பின்னி பெடல் எடுக்கிறார்.
hotlinksin

0 Responses to “மழைக்காலம் - விமர்சனம் (ரசிகர்களுக்கு இது போராத காலம்...)”

Post a Comment