ஓ.கே. ஓ.கே. - விமர்சனம் - வேணாம் மச்சான் வேணாம்...




காதலனுக்கு கல்தா கொடுத்துவிட்டு வேறு ஒருவனை மணக்கத் தயாரான மீரா தன் காதலன் சரவணனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். அதுவும், தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்திர வேணாம்… என்னும் பின்குறிப்போடு. அழைப்பிதழைப் பார்த்ததும் கடுப்பான மீராவின் காதலன் சரவணன் திருமண மண்டபடத்தில் புகுந்து மீராவை கடத்திக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் நண்பன் பார்த்தசாரதியை அழைத்துக் கொண்டு திருமணம் நடக்கும் புதுச்சேரிக்கு பயணிக்கிறான். சரவணனுக்கும் மீராவுக்கும் காதல் வந்தது எப்படி… காதல் ஏன் மோதலில் முடிந்தது… அவள் வேறு ஒருவனை மணக்க முடிவெடுத்தது ஏன்? கடைசியில் சரவணன் மீராவுடன் இணைந்தானா என்பதை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

தியேட்டருக்கு படம் பார்க்க போகும் ரசிகனை குற்றுயிரும் குலைஉயிருமாய் திருப்பி அனுப்புகிற படங்களே தொடர்ந்து சமீபகாலமாக வந்து கொண்டிருக்க படம் முழுக்க சிரிக்க வைக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். சந்தானம் அறிமுகமாவதில் இருந்து தொடரும் காமெடி படம் க்ளைமேக்ஸ் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மணிநேரம் 50 நிமிடங்கள் படம் என்றாலும் படம் பரபரப்பாக நகர்வதால் இடைவேளை வருவதும் தெரியவில்லை. படம் முடியும் போது அட… அதுக்குள்ள படம் முடிஞ்சு போச்சா… என்று எண்ண வைக்கிறது.

ஹீரோவாக அறிமுக நாயகன் உதயநிதி. எந்த ஒரு பில்டப்புமே இல்லாமல் திரையில் அறிமுகமாகி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஈர்த்து விடுகிறார். இயல்பாக உதயநிதி நடித்திருப்பது இன்னும் அவருக்கு ப்ளஸாக இருக்கிறது. கீப் இட் அப்… உதயநிதிக்கு எளிதாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு நடன அசைவுகளும் என்றாலும் அதிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

ஹன்ஸிகா இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் பண்ணுகிறார் என்றே சொல்லலாம். முகத்தில் கண்களில் காட்டும் எக்ஸ்பிரஷனே ஹன்சிகாவை இன்னும் தமிழ்சினிமாவில் தூரத்திற்கு அழைத்துச் செல்லும்.

சென்டிமென்ட் அம்மாவாக வந்து திரையில் கண்ணைக் கசக்கும் சரண்யா முதன் முதலாக கலகலக்கவும் வைக்கிறார்.

உதயநிதிக்கு அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள் மனைவியை காணாமல் தவிக்கிற தவிப்பு இருக்கிறதே… அந்த இடத்தில் உச் கொட்ட வைக்கிறார்.

ஹன்ஸிகாவின் அப்பாவாக வரும் ஷயாஜி ஷிண்டே காதலுக்கு உதவுகிற கேரக்டரோ என்று நினைத்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சராசரி அப்பாவாகவே வந்து போகிறார்.

ராஜேஷின் பிராண்டட் நடிகரான ஆர்யா, ஆன்ட்ரியா, சினேகாவும் வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறார்கள்.

படத்தில் உதயநிதியை விட அதிகமாக சந்தானமே வருவார் போலும் அந்த அளவுக்கு சந்தானத்திற்கு காட்சிகள். இதனாலேயே காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே நகர்கிறது. போர் அடிக்கக்கூடிய காட்சிகள், நெளிய வைக்கிற காட்சிகள் என்று எதுவும் இல்லை.

ஹரிஸ்ஜெயராஜ் இசையில் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்கிற ரகம். வேணாம் மச்சான் வேணாம் இளைஞர்களின் தேசியகீதமாக இருக்கும். அழகே அழகே சூப்பர் மெலடி. அகிலா அகிலா பாடலும் கலக்கல் ரகம்.

ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம். பாடல்களில் கலக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அளவெடுத்து எடிட் பண்ணியது போல் இருக்கிறது எடிட்டிங் வொர்க்.

இயக்குநர் ராஜேஷின் முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை விட இந்த படத்தில் திரைக்கதை, அழுத்தமான காட்சிகள், காமெடி அனைத்திலுமே பலமடங்கு அதிகமாக பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
hotlinksin

0 Responses to “ஓ.கே. ஓ.கே. - விமர்சனம் - வேணாம் மச்சான் வேணாம்...”

Post a Comment