தயாரிப்பாளர் காலை வாரிய நடிகர்
இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சுவையான சம்பவங்களைக் களமாகக் கொண்டு இளசுகள் என்னும் படம் உருவாகி வருகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்ஸடன வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரையுலகிற்கு புதியவர். இவரது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் படத்தைத் தயாரிக்க வந்துள்ளார். மீடியம் பட்ஜெட்டில் படத்தை முடித்து விட வேண்டும் என்று களம் இறங்கியிருக்கிறார்கள்.
புதுமுகமாக அறிமுகமாகும் இப்படத்தின் ஹீரோவின் நட்பு கிடைத்திருக்கிறது. கையில் இருக்கும் தொகை படத்தைத் தயாரித்து முடிக்க போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் அவரிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன... உங்களுக்கு எத்தனை லட்சம் வேணும்னு சொல்லுங்க... நான் அரேஞ்ச் பண்ணிடுறேன்... ஆனா, என்னை ஹீரோவாகப் போட்டுதான் படம் எடுக்கணும்...’ என்று சொல்லியிருக்கிறார் ஹீரோ. ‘பணம் போடுறாரே... அப்புறம் என்ன ஹீரோவாக அவரையே போட்டு படத்தை எடுத்துவிடலாம்...’ என்று முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.
படத்தின் பூஜையும் போட்டு முடித்தாயிற்று. படப்பிடிப்பையும் துவக்கிவிட்டார்கள். தயாரிப்பாளரின் பணம் தண்ணியாய் செலவாக ஆரம்பித்தது. ஹீரோவிடம் போன தயாரிப்பாளர் ‘தம்பி... பணம் ரொம்ப செலவாகிட்டு இருக்குது... நீங்க தரேன்னு சொன்ன பணத்தை எப்போ தருவீங்க...’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஹீரோ... ‘அடுத்த வாரம் ஊருக்கு போறேன்... ஊர்ல இருந்து அரேஞ்ச் பண்ணிட்டு வந்து தந்துடுறேன்...’ என்று சொல்லியிருக்கிறார்.
ஒருவாரம் ஊருக்கு போய்விட்டு வந்த ஹீரோவின் முன்னால் போய் நின்றிருக்கிறார் தயாரிப்பாளர். ‘என்ன தம்பி... பணம் ரெடியா...?’ என கேட்டிருக்கிறார்.
‘அப்பாகிட்ட ரெடி பண்ண சொல்லியிருக்கேன்... ஒரு வாரத்தில பேங்க்ல போட்டிருவாங்க... டோன்ட் ஒரி...’ என்று நம்பிக்கையுடனே சொல்லியிருக்கிறார் ஹீரோ. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்திருக்கிறது. பாதி படம் முடிந்த பிறகும் ஹீரோ பணத்தை இறக்காததால் சற்றே டென்ஷனான தயாரிப்பாளர், ‘என்ன தம்பி... என்ன ஆச்சு... பணத்தை தருவீங்களா... இல்லையா...?’ என்று கேட்டிருக்கிறார்.
பாதி படம் முடிந்துவிட்டதல்லவா... இனிமேலும் படத்தில் இருந்து தன்னை தூக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட ஹீரோ ‘சார்... அது வந்து... அப்பா பணம் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு...’ என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் அதிர்ந்தே போய்விட்டார் தயாரிப்பாளர்.
‘என்ன தம்பி நான் உங்களைதான் மலை போல நம்பி இருந்தேன்... நீங்க என்னடான்னா... காலை வாரிட்டீங்களே...’ என்று வருத்தத்துடனே சொல்லியிருக்கிறார்.
‘என்ன பண்றது சார்... நான் எங்க அப்பாவை மலை போல நம்பியிருந்தேன்... அவரு என்னை கவுத்துட்டாரே....’ என்று சொல்லியிருக்கிறார் ஹீரோ.
முக்கால்வாசி படப்பிடிப்பு முடிஞ்சு போச்சு... இனி என்ன பண்றது... வேறு வழியில்லாமல் மீதி பணத்தையும் தன் கையிலிருந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தி முடித்திருக்கிறார்கள்.
கையில காசே இல்லாம தயாரிப்பாளருக்கு அல்வா கொடுத்து ஹீரோவாகிவிட்டதால் அந்த ஹீரோவைப் பற்றி ‘பையன் ரொம்பவே உஷாருப்பா...’ என்கிறார்கள் இளசுகள் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தயாரிப்பாளர் காலை வாரிய நடிகர்”
Post a Comment