மெளனகுரு சப்ப படமா?


மௌனகுரு வெளியான போது ரொம்பவே மௌனமாகத்தான் இருந்தது தியேட்டர் கலெக்க்ஷனும். நாட்கள் போகப் போக இந்த படம் நல்லாயிருக்கும் என்னும் மௌத் பப்ளிசிட்டியால் தியேட்டருக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் ஒரே ஒரு காட்சி மட்டும் மௌனகுருவை ஓட்டிக் கொண்டிருந்த தியேட்டர்காரர்கள் இப்போது இரண்டு காட்சி முதல் நான்கு காட்சிகள் வரை அதிகரித்திருக்கிறார்களாம். இதனால்தானே என்னவோ அருள்நிதி தனது பேஸ்புக்கில், ‘மௌனகுரு சப்ப படம்ன்னு சிலர் சொன்னாங்க... அவங்களுக்கு மௌனகுரு நல்ல படம்னு செய்தி போயிருக்கு...’ என்று எழுதியுள்ளார்.

18:20 by iamvenkatesh · 1

hotlinksin

விஜயகாந்த் நீங்களா இப்படி? நம்பவே முடியலை...


பேரும் புகழும் கிடைத்துவிட்டாலே கடந்து வந்த பாதையை நம்மில் பலரும் ரொம்பவே எளிதாக மறந்து போய்விடுகிறோம். விஜயகாந்த் இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. விஜயகாந்தை வைத்து சூப்பர் டூப்பர் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனை. இவர் படங்களாலேயே திரையுலகில் விஜயகாந்த் பெரிதும் வளர்ந்தார் என்பது ஊரறிஞ்ச விஷயம். அப்படிப்பட்ட ஆர். சுந்தர்ராஜனையே மறந்து போனார் விஜயகாந்த்.

 ஆர். சுந்தர்ராஜனின் மகன் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்து விட்டார். இந்த சம்பவம் அறிந்த திரையுலைகைச் சேர்ந்தவர்களும் மற்ற நண்பர்களும் அவரைத் தேடி வந்து இது பற்றி விசாரித்த போது விஜயகாந்த் மட்டும் அவரை இதுவரை போனில் கூட தொடர்பு கொண்டு விசாரிக்கவில்லையாம். ‘என்னதான் பேரும் புகழும் வந்தாலும் அரசியலில் குதித்துவிட்டாலும் பழசை எல்லாம் அதற்குள் மறந்துவிடுவார்களா?’ என்று தனக்குத் தானே சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்

11:08 by iamvenkatesh · 0

hotlinksin

அடிடா அவளை... உதைடா அவளை... வெட்ரா அவளை...


மயக்கம் என்ன படத்தில் வரும் இந்த பாடல் வரிகளை இந்த கட்டுரைக்குத் தலைப்பாக வைத்திருப்பது ஏன் என்பது இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது உங்களுக்குப் புரியும். அதே நேரத்தில் இந்த பாடலை நீங்களும் என் நண்பனுக்காக பாடுவீர்கள் என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் ஒருநாள், மாலை நேரத்தில் இசையருவி பார்த்துக் கொண்டே டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த போது என் நண்பனிடம் இருந்து என் மொபைலுக்கு அழைப்பு வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் என்னிடம் பேச வேண்டும் என்று அவன் அழைத்ததும் வண்டியில் நண்பனைப் பார்க்கக் கிளம்பினேன். பீச் போலாமாடா... கொஞ்சம் ப்ரீயா பேசணும்... என்றான். ம்... அதனால என்ன? தாராளமாகப் போகலாம்.

மெரினா கடற்கரைக்கு பயணப்பட்டோம். வண்டியை பார்க்கிங் பண்ணிவிட்டு ஒரு ஓரமாய் இருந்த சுவரில் அமர்ந்தோம் இருவரும். என் நண்பன் வெறுமனே கடலைப் பார்த்துக் கொண்டே இருந்தான். என்னடா ஆச்சு? ஏன் பேசாம இருக்கே... என்றேன். ஏன்டா... எல்லா பொண்ணுகளுமே இப்படித்தான் இருப்பாங்களா? என்று அவன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தேன். அவன் கண்கள் கலங்கியிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என்ன ஆச்சு? என்றேன்.

அவ, என்ன மறந்துருன்னு சொல்லிட்டாடா... என்ற என் நண்பன் கேவி கேவி அழ ஆரம்பித்தான். என் வாழ்க்கையில் ஒரு இளைஞன் அழுவதை அப்போதுதான் முதன் முதலில் நான் பார்க்கிறேன். அவன் அழுத போது அவனை நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவன் தோளில் கை போட்டுக் கொண்டு அழாதடா... என்றேன். அவன் விம்மல் இன்னும் அதிகமாயிற்று. நண்பன் அழும்போது தேற்ற வேண்டிய எனக்கும் மனதுக்குள் கொஞ்சம் வேதனைதான் அவன் அழுகையைப் பார்த்த போது.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்கை இந்த நேரத்தில் நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். 

என் நண்பன் அவன் உறவுக்கார பெண்ணை சில மாதங்களாக காதலித்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணின் வீட்டில் நல்ல வசதி. அவன் வீடடிலோ கொஞ்சம் சுமாரான வசதிதான். அந்த பெண் அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவன் மனதில் அந்த பெண்ணை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். 

இதனாலேயே அவள் அவனிடம் போனில் பேசும் போதெல்லாம் ‘உங்க வீட்ல உன்ன எனக்கு கல்யாணம் பண்ணித் தரமாட்டாங்க...’ என்று சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு கட்டத்தில் அவளும் எரிச்சலாகி ‘என் அப்பா அம்மா விருப்பப்படிதான் என் கல்யாணம் நடக்கும். இனிமேல் என்னிடம் பேசாதே... என்னை மறந்துரு...’ என்று சொல்லியிருக்கிறாள். 

ஏதோ விளையாட்டாக சொல்கிறாள் என்று நினைத்தவனுக்கு அவள் போன் நம்பரையும் மாற்றிவிட்ட பிறகுதான் நிஜமாகவே சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்திருக்கிறது. போகிற போக்கில் என் நண்பனையும் அவன் காதலையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள். சில நாட்களாகவே மனதுக்குள்ளேயே குமைந்த என் நண்பன் ஆட்டோகிராப் சேரன் மாதிரி சில நாட்கள் ஆகிவிட்டான்.

இந்த ப்ளாஷ் பேக்கில் அவன் காதலிப்பது வரைதான் எனக்குத் தெரியும். மீதி எல்லாவற்றையும் அன்று பீச்சில் வைத்து அவன் சொன்னபோதுதான் எனக்கு தெரியும். அவனை அவள் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டாள் என்பதை நான் கேட்ட போது மிகவும் அதிர்ச்சியானேன்.

சரியான காரணம் ஏதும் சொல்லாமலே அவனை அந்த பெண் வேண்டாம் என்று சொன்னது என் நண்பன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துவிட்டது. வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டான். அன்று அவன் என்னை சந்தித்திருக்காவிட்டாலோ என் பிஸியான வேலைகளுக்கிடையே அவனை சந்திப்பதை அன்று நான் தவிர்த்திருநதாலோ ஒருவேளை என் நல்ல நண்பர்களில் ஒருவனை நான் நிச்சயம் இழந்திருப்பேன்.

அவனை நார்மல் நிலைமைக்கு கொண்டு வர நான் படாதபாடுபட்டேன். ஒருவழியாக ஏதேதோ பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்ததேன். என்னிடம் சொன்னதில் அழுததில் அவன் மனதின் பாரம் கொஞ்சமாவது குறைந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவன் தங்கியிருக்கும் மேன்ஷ்னில் அவனை ட்ராப் பண்ணிவிட்டு வீட்டுக்குப் பயணமானேன். 

வண்டி ஓட்டும் போது எனக்கு அவன் நினைப்பாகவே இருந்தது. தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் ஒருவனை எப்படி இவ்வளவு ஈஸியாக இந்த பெண்களால் கழற்றி விட முடிகிறது...? நினைக்கும் போது மயக்கம் என்ன படத்தின் பாடலில் வரும் ‘அடிடா அவளை... உதைடா அவளை... வெட்ரா அவளை...’ வார்த்தைகள் என் மனதில் வந்து போயின.

00:21 by iamvenkatesh · 2

hotlinksin

லோ பட்ஜெட் படங்கள் தோல்வியடைவது ஏன்?



படம் சூப்பரா இருக்குப்பா... ஆனா கூட்டம்தான் வரக்காணோம்... படம் பார்க்க போன இடத்தில் வண்டி நிறுத்தும் போது டோக்கன் கொடுப்பவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தால் அவ்வப்போது இந்த வார்த்தைகள் காதுகளில் விழுவது உண்டு. படம் நல்லாத்தான் இருக்கு. அப்படியானால் ஹிட்டாக வேண்டுமே? ஏன் ஹிட்டாகவில்லை? லோ பட்ஜெட் படங்கள்தான் இது போன்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. என்ன காரணம்.

படம் தயாரிக்க வருகிறவர்களில் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள் ஒரு வகை. பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க வருபவர்கள் இன்னொரு பிரிவினர்.பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்கள் பணத்தைக் கொண்டு வந்து கொட்டி படத்தை எடுக்கின்றனர். பெரிய ஸ்டார் காஸ்டிங், முன்னணி இயக்குநர்கள் என்று இவர்கள் பிரமாண்டமாக களம் இறங்குவதால் படத்தை எடுத்தோமா விநியோகஸ்தர்களிடம் விற்றோமா கல்லா கட்டினோமா என்ற ரீதியில் இருக்கின்றனர். லோ பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள்தான் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் குறைந்த பணத்தை கையில் வைத்துக் கொண்டுதான் படத்தைத் தயாரிக்க களம் இறங்குகிறார்கள். அவர்களிடம் படத்தின் பட்ஜெட்க்கான திட்ட வரையறை எதுவும் ஸ்கிரிப்படாக கையில் இருக்காது. படம் துவங்கும் போது ஒரு தொகையை சொல்லும் இயக்குநர் முடியும் போது அதை டபுளாக்கி விட்டிருப்பார். இதனால் சொத்தை விற்றும் எதையெல்லாம் அடமானம் வைக்க முடியுமோ அதையெல்லாம் அடமானம் வைத்தும் படத்தை எடுத்து முடிக்கிறார் தயாரிப்பாளர்.

முடித்த பின்பு படத்தைப் பற்றிய டாக் உருவாக்கியாக வேண்டுமே அதற்கு கையில் நயா பைசா இருக்காது. அப்புறம் எப்படி படத்தை பப்ளிசிட்டி பண்ணுவது? படத்தை விற்பது. இதனால் படம் சில காலம் விற்கப்படாமலே கிடக்கும். அப்புறம் சொந்தமாகவே படத்தை ரிலீஸ் பண்ணுவார் தயாரிப்பாளர். படம் விளம்பரம் இல்லாமலே வெளியாவதால் இலவசமாக கூப்பிட்டு படத்தைப் போட்டுக் காட்டினால் கூட நம்ம ஆளுங்க போய் பார்கக மாட்டாங்க. அப்புறம் என்ன தயாரிப்பாளருக்கு ஒட்டு மொத்த பட டீமும் ‘சட்டி சுட்டதடா...’ பாடலை டெடிகேட் செய்வார்கள்.

மார்க்கெட்டிங் என்னும் கலையைப் பற்றி இன்னமும் நம் தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்மே. படத்தை  தயாரிப்பதோடு தங்கள் வேலை முடிந்தது வந்து எல்லோரும் கியூவில் நின்று படத்தை வாங்குவார்கள் என்றே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள். ஆனால் அந்தக் காலம் எல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு!

மூன்று கோடி செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பளர் 25லட்சம் கூட பப்ளிசிட்டிக்காக ஒதுக்குவதில்லை. இப்படி குறைந்த தொகையை விளம்பரத்துக்கு ஒதுக்கும்போது, பப்ளிசிட்டி பப்ளி‘ஜ’ட்டியாகி விடுகிறது. இதனால் படமும் ஊத்திக் கொள்கிறது. படங்க்ள் தோல்வி அடைவதற்கு பப்ளிசிட்டி செய்யாததும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் விளம்பரத்துக்கு பெரிய தொகையை ஒதுக்குவதும், வித்தியாசமாக விளம்பரம் செய்வதும் எண்ணமும் உருவாகாதவரை படங்கள் தோல்வி அடைவதும் தவிர்க்க முடியாததுதான்!

19:28 by iamvenkatesh · 0

hotlinksin

இனியாவின் புது டெக்னிக் - அதிர்ந்து போன பத்திரிகையாளர்கள்



வாகைசூடவா, மௌனகுரு என இனியாவின் திரைப் பயணத்தில் தோல்விப் படங்களையும் சுமார் படங்களையும் லிஸ்ட் போடலாம். ஆனால் இவர் பண்ணுகிற ஆர்ப்பாட்டம்தான் சகிக்கலை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். பேட்டி என்று போன பத்திரிகையாளர்களிடமே இவர் பணம் கேட்ட விஷயம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சமீபத்தில் சேனல் ஒன்று இவரைத் தொடர்பு கொண்டு ‘உங்க பேட்டி வேணும்’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ‘எவ்ளோ அமௌன்ட் தருவீங்க…’ என்று கேட்டிருக்கிறார் இனியா. ‘பேட்டிக்கு பணமா?’ அதிர்ச்சியாகியிருக்கிறது சேனல் தரப்பு. ‘ஆமா… பின்னே… என் பேட்டியத் தானே போட்டு சம்பாதிக்கிறீங்க… அப்புறம் எனக்கு பணம் தர்றதுல என்ன கஷ்டம்’ என்று சொல்லியிருக்கிறார் இனியா. ரெண்டு மொக்கை படத்தில நடிக்கிறதுக்குள்ள அம்மணி பண்ற டார்ச்சர் தாங்கலை… என்று நொந்து சோன சேனல் தரப்பு இனிமே அந்த பொண்ணு சம்பந்தப்பட்ட செய்திகளை இருட்டிப்பு செய்வது என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

14:51 by iamvenkatesh · 1

hotlinksin

அய்யய்யோ... இன்ட்லிக்கு என்ன ஆச்சு...




பிளாக்குல நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும் எழுதித் தள்ளுற நமக்கெல்லாம் குலதெய்வமா இருக்கிறது இந்த இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகள்தான். நாலு நாளு ரூம் போட்டு யோசிச்சு எழுதினா கூட இவங்களோட தயவு இல்லாம அதை இந்த உலகத்துக்கு சொல்ல முடியாது. இதுல பாருங்க இந்த இன்ட்லி இன்று காலை முதல் வேலை செய்யவில்லை. டேட்டா பேஸ் எரர் என்று வருகிறது. பயனர் பெயர் கடவுச் சொல் கொடுத்தால் கூட உள்ளே நுழைய மாட்டேங்குது. இதனால நம்மை மாதிரி எழுதிக் கிழிக்கிற நண்பர்களுக்கு சிரமம்தான். அதைவிட பெரும் சிரமம் இன்ட்லியை நடத்துகிறவர்களுக்கு. இன்ட்லி சீக்கிரமே சரியாகி மீண்டும் பழைய மாதிரி கெத்தாக வலம் வர வேண்டுகிறேன்.

11:25 by iamvenkatesh · 1

hotlinksin

சொர்ணமால்யா நீங்க இப்படி பண்ணலாமா?



சொர்ணமால்யாவுக்கு வேணும்னா உங்களைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் உங்களுக்கு சொர்ணமால்யாவைத் தெரிந்திருக்கும்.

01:30 by iamvenkatesh · 7

hotlinksin

வெற்றிமாறனுக்கு பவர் ஸ்டார் தந்த அதிர்ச்சி





பவர் ஸ்டார் தன் படங்களின் மூலம் ரசிகர்களுக்குத்தான் அதிர்ச்சியை இதுவரை கொடுத்துக் கொண்டிருந்தார்.  முதல் முறையாக ஒரு இயக்குநருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் நம்ம பவர் ஸ்டார். 

பொல்லாதவன் படத்தை எடுப்பதற்கு முன்பே வெற்றிமாறன் தான் தயார் செய்த வைத்திருந்த கதைக்கு தேசிய நெடுஞ்சாலை என்று தலைப்பு வைத்திருந்தாராம். அந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தும் வைத்திருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு பிறகு பொல்லாதவன் படத்தை எடுக்க, அதைத் தொடர்ந்து ஆடுகளம் என்று பிஸியாகிவிட்டார் வெற்றிமாறன்.  

தற்போது இயக்கிவரும் வடசென்னை முடிந்ததும் அடுத்து தேசிய நெடுஞ்சாலை படத்தை இயக்கிவிடுவது என்று முடிவே செய்து வைத்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் விதி வேறு விதத்தில் விளையாடிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் நடிப்பில் தேசிய நெடுஞ்சாலை என்ற படம் வெளிவரப் போவதாக விளம்பரம் வர அதிர்ந்தே போயிருக்கிறார் வெற்றிமாறன். 

சில மாதங்களுக்கு முன்பே அந்த டைட்டில் காலவதியாகிவிட அதை புதுப்பிக்காமல் மறந்து விட்டிருக்கிறார்கள். காத்திருந்த பவர் ஸ்டார் சரியான நேரத்தில் டைட்டிலை தனக்கு மாற்றிவிட்டாராம்.

பின்னே... பவர் ஸ்டார்னா சும்மாவா...

22:06 by iamvenkatesh · 0

hotlinksin

இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் - எந்த படம் ஹிட்டாகும்? எந்த படம் ப்ளாப் ஆகும்?




படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருக்க, இந்த வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 12 படங்க்ள் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் குறித்து ஒரு சின்ன முன்னோட்டம் பார்க்கலாம்.

1. பதினெட்டான்குடி எல்லை ஆரம்பம்

இந்த படத்தில் ஹீரோவாக பாண்டியராஜன் மகன் ப்ரித்வி நடித்திருக்கிறார். இவருடன் இன்னும் மூன்று பேர் ஹீரோவாக களம் இறங்குகிறார்கள். காமெடிக்கு சிங்கம்புலி வகையறா இருப்பதாலும், இந்த படத்தை முழுக்க முழுக்க காமெடி ஸ்பெஷல் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2. மகான் கணக்கு

சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவுக்கு இன்னும் பெயர் வாங்கிடாத ஹீரோ ரமணா நடிக்கும் படம். இந்த படத்திற்கு முதலில் காந்தி கணக்கு என்று பெயர் வைத்திருந்தார்கள். பின்னால், அந்த பெயர் ஏதாவது பிரச்சனையை தோற்றுவிக்கும் என்று கருதி, மகான் கணக்கு என்று மாற்றியிருக்கிறார்கள்.

3. மகாராஜா

நெல்லு படத்தில் நடித்த சத்யா, அஞ்சலி ஜோடி சேரும் படம் இது. இவர்களுடன் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

4. விநாயகா

புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படம் ஓசையின்றி களம் இறங்குகிறது. படத்தில் சந்தானம் இருப்பதால் அவர் கொஞ்சம் படத்தைத் தாங்கிப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 30 ஆம் தேதி இந்த படம் நிச்சயம் ரிலீஸ் ஆகிவிடுமா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்குரியதுதான். ஏனெனில் இந்த படத்தின் விளம்பரங்களில் இன்றுவரைக்கும் எந்த எந்த தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது என்பது பற்றிய விபரங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

5. கருத்தகண்ணன் c/o ரேக்ளா ரேஸ்

மோட்டார் ரேஸ், கார் ரேஸ் என்று காலம் எங்கோயோ போய்விட்ட பிறகு மாட்டு வண்டி ரேஸ் பற்றி சொல்ல வருகிறார்கள் புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படத்தில். எந்தவித எதிர்பார்பையும் உருவாக்கமால் தியேட்டர் கிடைத்தால் ரிலீஸ் பண்ணிவிடலாம் என்ற நோக்கத்தில் களம் காணும் படம்.

6. பாவி

இவன் மீன் கொத்தி பறவை அல்ல. பெண்களைக் கொத்தும் கழுகு என்ற வாசகங்களுடன் விளம்பரம் செய்யப்பட்டு வரும் படம் பாவி. மூணார் படத்தின் இயக்குநரின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. புதுமுகங்கள் நடிப்பில் கொஞ்சம் கிளாமர் கலந்த படம். 

7. அம்மான்னா சும்மா இல்லடா...

பாண்டியராஜன் நடிப்பில் வெளிவர உள்ள படம். ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாருமே கொஞ்சம் திரைக்குப் புதியவர்கள்தான். படத்தை இயக்கியிருக்கும் ரவிராஜா ஏற்கனவே படம் இயக்கியவர்.

8. அபாயம்

கிருஷ்ணவம்சி இயக்கியிருக்கும் அபாயம் படத்தில் ஷெரின் நடித்துள்ளார். த்ரில்லர் படமான அபாயம் துவக்கக் காட்சிகள் முதல் படம் முடியும் வரை பெரும் த்ரில்லருடன் நகரும் என்று நடிகை ஷெரினே சொல்லியிருக்கிறார்.

9. வழிவிடு கண்ணே வழிவிடு

புதுமுகம் தமிழ் அறிமுகமாகும் படம். இவருக்கு ஜோடியாக மதுஸ்ரீ நடிக்கிறார்.

இந்த படங்கள் தவிர, பிரியாமணி நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்று வேட்டை நாயகன் என்ற டைட்டில் ரிலீஸ் ஆகிறது. ஸ்பீட் அசுர வேகம் 2012, புயல் வீரன் என்னும் ஆங்கில டப்பிங் படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

18:41 by iamvenkatesh · 0

hotlinksin

அவங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு?



கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கடற்கரை சாலையில் ஒரு ஆட்டோ டிரைவரும் பேருந்து ஓட்டுநரும் மோதிக் கொண்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை நீங்கள் அந்த செய்தியை அறிந்திருக்காவிட்டால் அதுக்காக ஒரு சின்ன இன்ட்ரொ.

சென்னை கடற்கரை சாலையில் ஆட்டோவில் தனது குடும்பத்துடன் போய்க்கொண்டிருக்கிறார் ஆட்டோ டிரைவர் ஒருவர். சென்னை மாநகர பேருந்து ஒன்று அந்த ஆட்டோவை முந்த முயற்சிக்கும் போது ஆட்டோவை உரசுவது போன்று வேகமாக வர, கடுப்பான ஆட்டோ ஓட்டுனர் ஆத்திரத்தில் பஸ் டிரைவரை திட்டுகிறார். இதனால் கோபமான பஸ் டிரைவர் பேருந்தை விட்டு கீழே இறங்கி வர இருவரும் திட்டி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்ட அந்த வழியாக வந்த மற்ற பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை நிறுத்திவிட்டு களத்தில் குதிக்க ஒரு வழியாக ஸ்டிரைக் ஆரம்பமாகிறது. சற்று நேரத்தில் போலீஸ் வந்து ஆட்டோ டிரைவரை கைது செய்ய ஓட்டுநர்கள் கலைந்து சென்று வண்டியை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

இது எப்போதாவது சென்னையில் நடந்து கொண்டே இருக்கும் சம்பவம்தான். ஆனால் இந்த ஓட்டுநர்கள் என்ற பூனைக்கு யார்தான் மணிகட்டுவது என்று தெரியவில்லை. ஆ... ஊ... என்றால் இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஸ்டிரைக்கில் குதித்துவிடுகிறார்கள். அப்போது அந்த ஏரியாவே டிராபிக்கினால் ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஆட்டோ, டூவீலர், கார் என எந்த வாகனத்தில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

சண்டை போட்டது ஆட்டோ டிரைவரும் பேருந்து ஓட்டுனரும். ஆனால், தண்டனை என்னவோ மற்ற மக்களுக்குதான். அந்த நேரத்தில் காத்திருக்கும் போது ஏற்படும் டென்ஷனில் முக்கால் வாசிபேருக்கு ஊரு உலகத்தில இல்லாத நோய் எல்லாம் வந்து சேர்ந்து விடும்.

இனிமேலும் இது போன்று கொம்பு முளைத்த பஸ் டிரைவர்கள் இப்படி ஏதாவது பிரச்சனை என்றால் வண்டியை ஓரம் கட்டிக் கொண்டு பேசித் தீர்த்துக் கொள்வதோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவது நல்லது. அதைவிட்டு விட்டு எங்களுக்குத்தான் கொம்பு இருக்கே என்கிற பாணியில் பொது மக்களுக்கு இடையூறு செய்தால் எல்லா நேரமும் எல்லாரும் இது போன்று அமைதியாக போய்க்கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது வழக்கு தொடர்ந்தால் ஸ்டிரைக்கில் குதித்த அத்தனைபேருக்குமே ஆப்புதாண்டியோய்....

13:39 by iamvenkatesh · 4

hotlinksin

ராஜபாட்டை - இந்த வருடத்தின் சிறந்த ப்ளாப் படம்



ராஜபாட்டை இந்த வருடத்தின் சிறந்த தோல்விப் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. விக்ரம் தீக்ஷா சேத் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ராஜபாட்டை படம் பவர் ஸ்டார் படரேஞ்சுக்கு இருக்க, படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கோ ஏகப்பட்ட அதிர்ச்சி. இப்படியும் கூட படம் இயக்க முடியுமா? என்ற கேள்வியை சுந்திரனை நோக்கியும் இப்படிப்பட்ட படத்தில் கூட நடிப்பீங்களா? என்ற கேள்விக் கணையை விக்ரமை நோக்கியும் தொடுத்தனர் ரசிகர்கள். பத்திரிகையாளர்கள் இந்த படம் பற்றி விக்ரமிடம் கேட்ட போது, ‘வித்தியாசமாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தோம்... அதனால் இப்படி ஒரு படம் கொடுத்தோம்’ என்று சொல்லியுள்ளார். இந்த படத்திற்குப் பிறகு விக்ரமும் சுசீந்திரனும் எளிதில் தப்பித்துவிட, ரொம்பவே நொந்து போய் இருப்பது நம்ம தீக்க்ஷா சேத்தான். ஹீரோ விக்ரம் இயக்குநர் சுசீந்திரன்… அப்புறம் என்ன படம் பிச்சுக்கிட்டு போகும்.  இந்த படத்துக்கு அப்புறம் நாமதான் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது ராஜபாட்டை.

09:53 by iamvenkatesh · 0

hotlinksin

விதார்த் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?



முதல்இடம் இப்படி ஒரு சறுக்கலை ஏற்படுத்தும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் விதார்த். மைனா படத்தில் கிடைத்த உயரத்தை அடுத்தடுத்த படங்களில் இப்படி வேஸ்ட் பண்ணுகிறாரே என்று வருத்தப்பட்டனர் விதார்த்தின் அனுதாபிகள். விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கொள்ளைக்காரன் படம் முதல்இடத்தில் ஏற்பட்ட சறுக்கலை ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கிறார் விதார்த். சீனுராமசாமியின் உதவியாளர் தமிழ்செல்வன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடும் ஒருவன் பின்பு மிகப்பெரிய திருட்டுகளை செய்து எப்படி எஸ்கேப் ஆகிறான் என்பதுதான் கொள்ளைக்காரன் படத்தின் கதையாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளை கும்பகோணத்தில் படம் பிடித்திருக்கிறார்கள். கொள்ளைக்காரன் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டால் சரி!

19:46 by iamvenkatesh · 0

hotlinksin

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கிரான்ட் ஓப்பனிங்



சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு ரவுண்டு வந்த சிவகார்த்திகேயனைக் கூப்பிட்டு பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த படமான மெரினாவில் நடிக்க வைத்தார். மெரினா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திரையில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மரம் கொத்திப் பறவை. இந்த படத்தை வெற்றிப்பட இயக்குநர் எழில் இயக்கியிருக்கிறார். தனுஷின் 3 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். வேறு சில இயக்குநர்களும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறார்கள்.

18:46 by iamvenkatesh · 0

hotlinksin

நண்பன் க்ளைமேக்ஸை மாற்றிய ஷங்கர்



இந்தியில் வெளியாகி ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெயரில் தமிழில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். நண்பன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை இந்தியில் இருப்பது போன்று அப்படியே எடுக்கலாமா அல்லது மாற்றிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாராம் ஷங்கர். அவரது உதவியாளர்களோ படத்தின் க்ளைமேக்ஸை மாற்றி தமிழ் படங்களுக்கு ஏற்ற மாதிரி வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்த ஷங்கர் கடைசியில் இரண்டு வகையான க்ளைமேக்ஸ்களை படம் பிடித்திருக்கிறார். அவற்றில் ஒன்றை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தாலும், படத்தில் இடம்பெறப்போவதென்னவோ தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற க்ளைமேக்ஸ்தானாம்.

18:01 by iamvenkatesh · 0

hotlinksin

விஜய் மீது வீசப்படும் விமர்சனக் கணைகள் – ரசிகர்களின் பதிலடி





உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்று சொல்லுவார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கோ பல இடங்களில் இருந்து இடியும் அடியுமாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ‘ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு போய்விட்டு வந்த ஒரு கலைஞனால் பக்கத்தில் இருக்கும் தேனிக்கு போக முடியாதா?’ என்று பாரதிராஜா சீறினார். சமீபத்தில் சென்னை வந்தார் அன்னா ஹசாரே. நடிகர் அர்ஜூன் அப்போது அவரை சந்தித்தார். ஆனால் விஜய் அவரைப் போய் சந்திக்கவில்லை. ‘அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, டெல்லிக்கு போய் அவரை சந்தித்த விஜய், சென்னை வந்த போது அவரை சந்திக்கவில்லை’ என்று பொருமுகிறார்கள் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள்.

இது பற்றி விஜய் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள். ‘சீறுவதற்கும் பொருமுவதற்கும் முன்பு ஒன்றை யோசித்தால் நல்லது, அன்னா ஹசாரேவை விஜய் சென்னை வந்த போது போய் பார்க்க வேண்டும் என்று ஏதும் கட்டாயம் இருக்கிறதா என்ன? அவருக்கு முக்கிய வேலை ஏதாவது இருந்திருக்கலாம். டெல்லி போய் பார்த்தவருக்கு சென்னை வந்த போது பார்க்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கலாம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி. முல்லை பெரியாறு விஷயத்தில் விஜய் தேனி போய்வந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா என்ன…? விஜய் மீது மட்டும் ஏன் தொடர்ந்து விமர்சனக் கணைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள்…?’ என்று பதிலும் கொடுத்து கேள்வியும் எழுப்புகிறார்கள் விஜய் ரசிகர்கள்.


14:31 by iamvenkatesh · 1

hotlinksin

நீங்களும் சினிமா பாடலாசிரியர் ஆகலாம்...




பேப்பரோ கீ போர்டோ கிடைத்தால் போதும் கவிதை கவிதையாய் எழுதித் தள்ளுகிற ஆசாமியா நீங்கள்? சினிமாவில் பாடல் ஆசிரியராக வேண்டும் ஆசை லட்சியம் இருக்கிறதா? உங்களுக்கு சரியான வாய்ப்பு காத்திருக்கிறது. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நான் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பாடலாசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தப் போகிறார் விஜய் ஆன்டனி. நீங்கள் ஏன் அந்த பாடலாசிரியராக இருக்கக் கூடாது?

vijayantony.com எனும் விஜய் ஆன்டனியின் இணையதளத்தில் பாடலுக்கான மெட்டு உள்ளது. இதை டவுன்லோடு செய்து கொண்டு, தகுந்தாற் போல பாடலை எழுதி அனுப்புங்கள். vijayantonylyrics@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு பாடலை அனுப்ப வேண்டும். பாடல் எழுதுகிறவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக முதல் பல்லவியையும் இவரே எழுதி பாடிக்காட்டியிருக்கிறார். எழுதி அனுப்புபவர்களில் யாருடைய பாடல் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அவருடைய படத்தின் பாடல் படத்தில் இடம் பெறும். தொடர்ந்து விஜய் ஆன்டனி படங்களில் அவருக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் வழங்கப்படும். என்ன… கவிஞர்களே… ரெடியா?

13:29 by iamvenkatesh · 0

hotlinksin

ராஜபாட்டை விமர்சனம்



சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தைப் பண்ணிய போது, அந்த படம் பெரிய அளவுக்கு வசூல் செய்யாவிட்டாலும், படம் பார்க்கிறப்ப ஏதோ ஒரு திருப்தி இருக்கும். அவரோட அடுத்தடுத்த படங்களில் அது மட்டும் மிஸ்ஸிங். ராஜபாட்டையும் இந்த வரிசையில நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜிம்பாய் அனல் முருகன் (விக்ரம்) படங்களிலே சண்டைக்காட்சிகளில் நடித்தாலும் பெரிய வில்லன் நடிகராக வரணும்ங்கிறதுதான் அவரது ஆசை. ஒரு நாள் ஒரு பெரியவரை சிலர் துரத்த அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் அனல் முருகன். அந்த அடியாட்களை அனுப்பியது தன் மகன் என்பதையும், தன் பெயர்ல இருக்கிற அனாதை இல்லத்தை அவனுக்கு எழுதிக் கொடுக்கலைன்னுதான் இப்படி எல்லாம் பண்ணுகிறான் என்று அனல் முருகனிடம் அந்த பெரியவர் சொல்ல தன்னுடன் அவர் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அவருடன் அழைத்துப் போகிறான். தீக்க்ஷா சேத்தைக் காதலிக்க ஐடியா சொல்லிக் கொடுக்கிறார் அந்த பெரியவர். ஒரு கட்டத்தில் அனல் முருகனை தவறாக புரிந்து கொண்டு தன் மகனுடன் போகிறார் அவர். அந்த கும்பலிடமிருந்து அந்த பெரியவரையும் அனாதை இல்லத்தையும் அனல் காப்பாற்றினானா என்பது க்ளைமேக்ஸ்.
Rajapattai-Poster-Stills-003
ஜிம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறார் விக்ரம். ஜிம் பாய் என்பதாலேயே உடம்பை அடிக்கடி காட்டிக் கொண்டு வருகிறார். சண்டைக்காட்சிகள் வந்துவிட்டால் விக்ரமை இன்ச் பை இஞ்சாக கேமரா காட்டிக் கொண்டே இருக்கிறது. கை நரம்புகள் புடைக்க… அய்யோ… அய்யோ… இதுக்கே ரொம்ப பிலிமை வேஸ்ட் பண்ணியிருக்காங்க போலிருக்கிறது. தீக்க்ஷா சேத் பேசுவதற்கு காட்சிகளே இல்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார். நைட் பேன்ட்டோடு அவரை பல இடங்களில் அலையவிட்டிருக்கிறார் இயக்குநர். படத்தில் ஒரு சின்ன ஆறுதல் தம்பி ராமையா இவர் காமெடி என்று நினைத்து பண்ணும் இடங்கள் சிரிப்பை வரவழைக்காவிட்டாலும்… அத்திப் பூத்தா மாதிரி ஏதோ ஓரிரு இடங்களில் சிரிப்பு வந்து தொலைக்கிறது.

பெரியவர் விக்ரமுக்கு காதலிக்க சொல்லிக் கொடுக்கும் ஐடியாக்கள் ரசிக்கவைக்கின்றன. படம் பெரியவரையே மையப்படுத்தி நகர்வதால் படத்தின் ஹீரோ ரேஞ்சுக்கு தெரிகிறார் அந்த பெரியவர். அவர் தீக்க்ஷா சேத்திடம் ‘காதலிப்பீங்க… அப்புறம் அப்பா ஒத்துக்கலை… அம்மா ஒத்துக்கலைன்னு… கழற்றி விட்ருவீங்க…’ என்று சொல்லும் காட்சியில் ரசிகர்கள் நிஜமாகவே பீல் பண்ணி கைத்தட்டுகிறார்கள். அந்த பெரியவரே ‘பசிக்கும் போது சாப்பிட்ரணும்… இல்லேனா சாப்பாடும் வேஸ்ட் வயிறும் வேஸ்ட்…’ என்று சில இடங்களில் தத்துவத்தையும் கொட்டிவிட்டுப் போகிறார். அவர் போய் தீக்க்ஷா சேத்தை படத்துக்கு வரச்சொல்லுகிற காட்சி இருக்கிறதே… அப்பா செம அலப்பறை.
இயக்குநர் கதைக்கு பெரிய அளவுக்கு மெனக்கெடவில்லை போலிருக்கிறது. நிலத்தைச் சுருட்டும் கும்பல் அது சம்பந்தமான நெட் ஒர்க் என அங்குலம் அங்குலமாக நுழைந்து கதை சொல்லும் சுசீந்திரன் பல காட்சிகளில் நம்மைக் கடுப்படிக்க வைத்துவிடுகிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகள். சண்டைக்காட்சிகளில் நன்றாகவே ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள். ஆனால் சதா சண்டையையே காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.
படம் முடிந்த பின்பு விக்ரமுடன் ஆட்டம் போடும் ரீமாசென்னையும் ஸ்ரேயாவையும் பார்ப்பதற்கு கூட முடியாமல் ரசிகர்கள் வேகேவேகமாக வெளியேறுகிறார்கள். பேசாம அந்த பாடலை வைக்காமலே இருந்திருக்கலாம்.

17:31 by iamvenkatesh · 0

hotlinksin