கலகலப்பு @ மசாலா கபே - சுடச்சுட விமர்சனம்



படம் பார்க்க வருகிற ரசிகர்களை சிரிக்க வெச்சு அனுப்பணும்கிற பாலிசியை வைத்துக் கொண்டு இன்று வெற்றிப் பட இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் இதை சில வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவருடைய படங்களில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. படத்தில் கலகலப்பை வைக்கும் இவர் கலகலப்பு என்று படத்திற்கு டைட்டில் வைத்தால் படம் எப்படி இருக்கும்?



கும்பகோணத்தில் மசாலாகபே என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் விமல். பேருதான் மசாலா கபேன்னு இருக்கே தவிர அது தலைமுறை தலைமுறையா நடத்தப்பட்டு வருகிற ஓட்டல். மூன்றாவது தலைமுறையான விமல் நடத்தும் போது மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடுகிறது. என்றாலும் பரம்பரை ஹோட்டலாச்சே என்ற எண்ணத்தில் நடத்தி வருகிறார். அங்கேயே சமையல்காரராக இருக்கிறார் தாத்தா ராகவன். அவருடைய பேத்தி ஓவியா. திடீரென இங்கு வந்து சேருகிறார் ஜெயிலில் இருந்து பரேலில் வந்து சேரும் சிவா. இவருக்கும் ஓவியாவுக்கும் காதல் பத்திக் கொள்கிறது. அதே நேரத்தில் அந்த ஊருக்கு வந்து விமலின் ஓட்டலையே மூடச் சொல்லுகிற ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலிக்கும் விமல் மீது காதல். விமல் மசாலா கபேயை நடத்தி வரும் இடத்தின் மீது தொழிலதிபர் ஒருவர் கண் வைத்துவிட, அந்த இடத்தை நைசாக சிவாவிடம் இருந்து எழுதி வாங்குகிறார் ஜான் மைக்கேல். ஏமாற்றி வாங்கிய மசாலா கபேவை திரும்ப வாங்கினார்களா...? அவர்கள் காதல் என்னவானது என்பது க்ளைமேக்ஸ்.

படம் துவங்கியதில் கொஞ்ச நேரத்திற்கு போரடிப்பது போல் மூவ் ஆனாலும், சிவா என்ட்ரி கொடுத்த பிறகுதான் படம் ஜாலி மூடுக்கு வருகிறது. அதுவும் சிவா அடிக்கும் மொக்கை கமென்ட்டுகளுக்கு பதில்களுக்கு தியேட்டரில் செம க்ளாப்ஸ்.

திடீர்ன்னு ஒரு கனவுப் பாட்டு அதில 100 பேரு ஹீரோ பின்னால ஆடுறது எல்லாம் படத்தை சில வருடங்களுக்கு முன்பு வெளியான சுந்தர் சியின் படங்களை நினைக்க வைக்கிறது.

மசாலா கபேயை நடத்தி வரும் வெள்ளந்தியான கேரக்டரில் விமல். உண்மையை மட்டுமே பேசுகிற இவர் லஞ்சம் கொடுப்பதற்கு போய் அடி வாங்கிவரும் காட்சி செம காமடி.

இவருடைய தம்பியாக வரும் சிவா காமெடியில் சந்தானத்தையே மிஞ்சுகிறார். சந்தானமாவது கொஞ்சம் ஆக்க்ஷன் கொடுத்தால்தான் சிரிப்பு வரும். ஆனால் சிவா சும்மா நின்று கொண்டு அடிக்கும் கமென்டுகளுக்கே தியேட்டர் அலப்பறை கொடுக்கிறது.

ஹெல்த் இன்ஸ்பெக்டராக வருகிற அஞ்சலி, திடீரென விமலை காதலிப்பதாக சொல்கிறார். அஞ்சலியின் மேனரிஸம் எல்லாமே எங்கேயும் எப்போதும் மணிமேகலையை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதே பாடி லாங்க்வேஜ். என்ன அதில் சுடிதர்... இதில் சேலை... அவ்ளோதான் வித்திசயாம். ரசிகர்களுக்கு அதிர்ச்சியே வருகிற வகையில் குத்தாட்டம் போடுகிறார்கள் அஞ்சலியும் ஓவியாவும். கிளாமராக பாட்டுக்கு ஆட வேண்டுமானாலும் தயார் என்று அம்மணிகள் அழைப்பு விடுப்பதாகவே இருக்கிறது இந்த நடனம்.

இடைவேளைக்குப் பிறகு வருகிறார் சந்தானம். முதல் பாதியில் சிவாவின் காமெடியில் களைகட்டுகிறது என்றால் இரண்டாவது பாதியில் சிவாவும் சந்தானமும் ஆளாளுக்கு வீடு கட்டுகிறார்கள்.

இன்ஸ்பெக்டராக வரும் ஜான் மைக்கேல், வட்டி கொடுப்பவராக வரும் இளவரசு, ராகவன் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறார்கள்.

சந்தானம் டீம் காரில் விமல், மனோபாலாவை துரத்துகிற காட்சிகள் நிச்சயம் இந்த வருடத்தின் காமெடி காட்சிகளில் சிறந்த இடம் பிடிக்கும்.

மசாலா கபேவை டெவலப் பண்ண மூலிகை சம்பந்தமான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதற்காகவே இயக்குநருக்கு தனியாக சபாஷ் போடலாம்.

சுந்தர் சியின் படங்களுக்கே உரித்தான மசாலாவுடன் உருவாகியிருக்கிறது இந்த மசாலா கபே சமையல்.
hotlinksin

0 Responses to “கலகலப்பு @ மசாலா கபே - சுடச்சுட விமர்சனம்”

Post a Comment