இஷ்டம் - விமர்சனம்



பார்த்த உடனே வரும் காதல்... கொஞ்ச நாள் பழகிய பின்பு பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலேயே  நடக்கும் கல்யாணம். அதன்பிறகு ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் வருகிறது சண்டை... கடைசியில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள் தம்பதிகள். சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகிவரும் இத்தகைய காதல் திருமணம் + விவாகரத்து சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இஷ்டம் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரேம் நிஸார்.



விமல் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்க்கிறார். மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். வீடு வசதி வாய்ப்புகளுடன் வாழும் இவருக்கு நிஷா அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணமும் பண்ணிக் கொள்கிறார்கள். சில நாட்களிலேயே வரும் சின்ன சண்டை பெரிதாக வெடிக்கிறது. கடைசியில் விவாகரத்து வரைக்கும் போய்விடுகிறார்கள். கேட்ட உடனேயே விவாகரத்தும் கிடைத்துவிட, பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர் இருவரும். விமலுக்கு ஒரு பெண்ணை பார்க்கிறார் அவர் அப்பா. நிஷாவுக்கும் அவர்கள் வீட்டில் ஒரு பையனைப் பார்க்கிறார்கள். பார்த்த வரன்கள் இருவருக்கும் பிடித்துவிட திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். இரண்டாம் திருமணம் நடந்ததா? இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

விமலுக்கு ஐடியில் வேலை பார்க்கும் இளைஞன் கேரக்டர் என்பதால் படம் முழுக்க தாடி மீசை இல்லாத விமலை பார்க்க முடிகிறது. நிஷா அகர்வாலுடனான ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கிறார் விமல். 
விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். பார்ப்பதற்கு காஜல் அகர்வால் மாதிரியே இருக்கிறார். காஜல் ஏற்கனவே செம பிஸியாகிவிட்டதால் அவரது கால்ஷீட் கிடைக்காதவர்கள் நிஷா அகர்வாலை தைரியமாக நடிக்க வைக்கலாம். 

விமலுக்கு நண்பனாக வரும் சந்தானம் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி செல்கிறார். ஹீரோ விமலில் துவங்கி அவரது அப்பா நிஷாவின் தோழிகள், அத்தை என ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கலாய்த்து தாக்குகிறார் சந்தானம்.

ஹீரோயினின் அம்மாவாக உமா பத்மநாபன், அத்தையாக யுவராணி, விமலின் அம்மாவாக பிரகதி, வாட்ச்மேனாக சார்லி, மொபைல் ரீசார்ஜ் கடை உரிமையாளராக வரும் கராத்தே ராஜா என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஒரு துணை நடிகர் செய்ய வேண்டிய கேரக்டரை சார்லியை பண்ண வைத்துவிட்டார் இயக்குநர். வாய்ப்பு இல்லை என்பதற்காக இரண்டே இரண்டு காட்சிகளில் வருகிற ஒரு கேரக்டரிலா சார்லி நடிக்க வேண்டும்.

தமன் இசையில் இரண்டு பாடல்கள் மெலடி ரகம். 

திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம் நிஸார். இன்று சமுதாயத்தில் பெருகி வரும் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் எடுத்ததெற்க்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு அவசரப்பட்டு விவாகரத்து வரைக்கும் போய்விடக் கூடாது என்கிற மெசேஜை படம் சொல்வதற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
hotlinksin

0 Responses to “இஷ்டம் - விமர்சனம்”

Post a Comment