ராட்டினம் விமர்சனம்
காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. அது உறவாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒரு வகையான இழப்பாக இருக்கலாம். பெத்தவங்களோட மிரட்டலுக்கு பயந்து காதலை துறப்பவர்கள்... இழப்புகள் ஏதும் இல்லாமலேயே காதலில் தோற்கிறார்கள். சிலரது காதலோ சில இழப்புகளுக்கு பின்பே வெற்றி பெறுகிறது. சில காதலோ தாங்க முடியாத இழப்புக்குப் பின்னாலும் தோற்றுப் போய்விடுகிறது.

படித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கிறார் ஜெயம் (லகுபரன்). பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனத்தின் (சுவாதி) மேல் காதல் வருகிறது. முதலில் தனலட்சுமிக்கு ஜெயத்தைப் பிடிக்காவிட்டாலும் போகப் போகப் பிடித்துவிடுகிறது. காதல் என்றாலே வில்லன் இல்லாமல் இருப்பார்களா? தனலட்சுமியின் குடும்பம் அவர்கள் காதலுக்கு குறுக்கே நிற்கிறது. அவர்களை மீறி தங்கள் காதலில் உறுதியாக நிற்கும் ஜெயமும் தனலட்சுமியும் தங்கள் காதலில் ஜெயித்தார்களா...? என்பது மனதை உருக வைக்கும் க்ளைமேக்ஸ்.

கதை என்று பார்த்தால் சாதாரண கதையாகத்தான் தெரியும். ஆனால் அதை திரைக்கதையாக்கும் போது இன்ட்ரஸ்டிங்கான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. காதல், அந்த காதலுக்கு பின்னால் எவ்வளவு இழப்புகள் வேதனைகள் என்று சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர் தங்கசாமி. படத்தின் துவக்கத்திலேயே நடக்கும் இரட்டைக் கொலைகள் அது நடக்க காரணம் என்ன... என்கிற பாணியில் கதை சொல்லியிருக்கிறார் தங்கசாமி. கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது இவர் கதை சொல்லும் பாணி.


தூத்துக்குடியில் நடக்கும் கதை என்பதால் தூத்துக்குடியில் முழுக்க முழுக்க படம் பிடித்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் நடப்பது போன்ற காட்சிகளை கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்த போதும் இவ்வளவு டீட்டெயிலான காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தூத்துக்குடி துறைமுகத்தை அங்குலம் அங்குலமாக அலசி படம் பிடித்திருக்கிறார்கள். திருச்செந்தூர் கோயில், குலசேகரன்பட்டிணம் என இவர்கள் கேமரா உள்வாங்கிய இடம் ஒவ்வொன்றும் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. தனலட்சுமி படிக்கும் பள்ளிக்கூடத்தின் பெயர் பலகையைக் காட்டிய போது பள்ளிக் கூடத்தின் பெயரை மறைத்துக் கொண்டு காட்டுவது அதே போல கதாபாத்திரங்கள் தண்ணி அடிக்கும் போது பாட்டிலை மறைப்பது, குடி உடல் நலத்திற்கு கேடு என டைட்டில் போடுவது இது போன்ற காட்சிகள் இயக்குநர் தங்கசாமிக்கு சமூகத்தின் மீது இருக்கும் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

படத்தின் முதல் பாதி ஜெயமும் தனலட்சுமிக்கும் காதல் வருவது, காதலை அவர்கள் டெவலப் பண்ணுவது என்று போகிறது. அதே நேரத்தில் ஜெயத்தின் அண்ணன் அசோக்கின் பிஸினஸ், அரசியல் பிரவேசம் குறித்தும் சொல்கிறது காட்சிகள். இடைவேளையின் போது செம பஞ்ச் வைக்கிறார் இயக்குநர். இடைவேளைக்குப் பிறகு காதலர்களுக்கு வரக் கூடிய பிரச்சினை, அதனால் ஏற்படுகிற விளைவுகள் என்று போகின்றன காட்சிகள். ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயமாக நடித்திருக்கிறார் புதுமுகம் லகுபரன். இவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். இவரை அசல் தூத்துக்குடி பையனாகவே மாற்றியிருக்கிறார்  இயக்குநர் தங்கசாமி. புதுமுகங்கள் என்று சொல்லிக் கொண்டு ‘நானும்தான் நடிக்கிறேன்’ என்று டார்ச்சர் பண்ணுகிற நடிகர்களுக்கு மத்தியில் தனித்திறமையுடன் லகுபரன் பளிச்சென மின்னுகிறார். இவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கேரக்டருக்கு என்ன தேவையோ அதற்கேற்றார் போல் இயல்பாக இருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். லகுபரரைனப் பார்க்கும் போது நம்ம பக்கத்து வீட்டு பையன் ரமேஷ், சுரேஷ் மாதிரி இருக்கிறது. படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நம்மை வெகுவாக கவர்ந்துவிடுகிறார் ஜெயம்... சாரி... லகுபரன்.

படத்தில் நம்மை வெகுவாக கவரும் இன்னொருவர் ஜெயத்தின் அண்ணனாக வரும் அசோக். இயக்குநர் தங்கசாமியே இந்த அண்ணன் கேரக்டரில் நடித்திருக்கிறார். சொல்லப் போனால் இந்த கேரக்டர்தான் படத்திற்கே ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்ம் இந்த கேரக்டர், செம ஷார்ப். ரியலாக ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் என்னும் போது அவர் எப்படி இருப்பார், என்னென்ன பிஸினஸ் பண்ணுவார்... எப்படி வலம் வருவார்... என்பதையெல்லாம் அசோக் குமார் கேரக்டர் சொல்கிறது. ஜெயத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அசோக் அவன் மீது கோபம் கொண்டு அடிக்கும் கேரக்டர், அப்போது அவன் அப்பா உள்ளே வர அடிப்பதை நிறுத்திவிட்டு போவது... என வீடுகளில் இயல்பாக நடக்கும் சம்பவங்களையே தேடிப் பிடித்து காட்சிகளில் வைத்திருக்கிறார் தங்கசாமி. இந்த இயல்பான காட்சிகளே படத்திற்கு மிகப்பெரும் வலு சேர்க்கின்றன. இவர் நடந்து போகும் போது வெளிப்படும் தோரணை, பேசுற போது இருக்கிற கெத்து... இது எல்லாமே தங்கசாமிக்கு நல்ல படம் இயக்க மட்டுமல்ல ஒரு அண்ணன் கேரக்டராகவே மாறவும் தெரியும் என்பதை காட்டுகிறது. கடைசியில் இந்த அண்ணன் கேரக்டருக்கு ஏற்படும் விபரீத முடிவு நம் கண்களை கலங்க வைத்துவிடுகிறது.

ஜெயத்திற்கு ஜோடியாக தனலட்சுமி கேரக்டரில் நடித்திருக்கிறார் சுவாதி. பொதுவா கேரள நடிகைகள் என்றாலே செமையாகத்தான் இருப்பார்கள். அப்படியிருக்கும் போது சுவாதி பற்றி சொல்லவா வேணும். அழகிலும் நடிப்பிலும் நாற்பது கேரள நடிகைகளை சேர்த்து செய்த மாதிரி தெரிகிறார் சுவாதி. தனலட்சுமி கேரக்டருக்கு நல்லாவே பொருந்தியிருக்கிறார் சுவாதி. ‘ஒரு பையன் என்னை லவ் பண்றேன்னு சொல்றாண்டி...’ என்று சொல்லும் அப்பாவி சுவாதி நம்மை அறியாமலே நம்மை தன் வசப்படுத்திக் கொள்கிறார். ‘கல்யாணம் பண்ணினா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...’ என்று இவர் துணிச்சலாக பெற்றோரிடம் பேசும் போது சபாஷ் போட வைக்கிறார்.

சுவாதிக்கு அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் எலிசபெத். தன் பொண்ணு யாரோ ஒரு பையனை லவ்வுகிறார் என்னும் போது மகளை நினைத்து பயப்படும் இவர், மகன் விபத்தில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து மகளை படாத பாடு படுத்துவது தனத்துக்காக நம்மை உச் கொட்ட வைக்கிறது. டீன் ஏஜ் மகளிடம் எப்படியெல்லாம் அணுகக் கூடாது என்பதற்கு தனத்தின் அப்பா அம்மா கேரக்டர் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தனத்தின் மாமாவாக வரும் அந்த அட்வகேட், தனத்தின் காதலை அவள் வீட்டிலும் ஜெயத்தின் வீட்டிலும் சொல்லும் போது வித்தியாசமான அப்ரோச்சில் மெச்ச வைக்கிறார்.

காமெடி நடிகர் என்று யாரும் படத்தில் இல்லாவிட்டாலும் ஜெயத்தின் நண்பன் பானை சேகராக வரும் அஜய் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவும் இவர் ஒரு பொண்ணுக்கு ரூட் விட அந்த பெண்ணோ ஜெயத்தை ரூட் விடுகிற காட்சிகள் ஏகப்பட்ட கலகலப்பு.

படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நம்மை உட்கார்ந்த இடத்திலேயே தூத்துக்குடிக்கு அழைத்துப் போய்விடுகிறது கேரமா. தொழில் நகரமான தூத்துக்குடியின் கலரான முகமும் கலங்கலான முகத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ராஜ்சுந்தரின் கேமரா.

இசையமைப்பாளர் மனு ரமேஷன் தேவையான இடத்தில் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார். ‘ஏத்து ஏத்து’ பாடல் தூத்துக்குடியின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறது. ‘அசத்தும் அழகு...’ இந்த வருடத்தின் டாப் மெலடி பாடல்களில் தனி இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘ஏலே ஏபுள்ள...’, ‘ஏனோ என் இதயம்’ பாடல்களும் ரசிக்க வைக்கும் ரகம். ‘யாக்கை சுற்றும் ராட்டினம்’ பாடல் கம்பீரம். 

ராட்டினத்தை இயக்கிருப்பவர் தங்கசாமி. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். புதுமுங்களை வைத்து இப்படி ஒரு படத்தை ஜீரணிக்கவே முடியாத ஒரு க்ளைமேகஸை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். ரியல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் திரையில் நடமாடவிட்டிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. நம் ஒவ்வொருவருக்குள் இருந்தும் ஓரிரு காட்சிகளை எடுத்து படமாக்கியிருப்பதாலோ என்னவோ படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் அசைபோட வைக்கின்றன. புதுமுகங்களை வைத்துப் படம் எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அட்டு படங்களாக எடுத்து ரசிகர்களை சாகடிக்கும் இயக்குநர்கள் ராட்டினம் இயக்குநர் தங்கசாமியிடம் கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கிட்டா பரவாயில்லை...

உங்கள் காதலுக்காக ‘போராடி’ ஒருவேளை நீங்கள் தோற்றிருந்தால் ராட்டினம் உங்கள் மனதில் இருந்து என்றுமே அகலப் போவதில்லை. ஒருவேளை காதலில் போராடி ஜெயித்திருந்தால் சில நாட்களுக்கு உங்களை இந்த ராட்டினம் தூங்கவிடாமல் செய்யும் என்பது மட்டும் உறுதி.
hotlinksin

0 Responses to “ராட்டினம் விமர்சனம்”

Post a comment