மனம் கொத்திப் பறவை - விமர்சனம்
சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன். அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில் அப்பாவுக்கு உதவியா பல நேரங்களில் நண்பர்களுடன் வெட்டியா ஊரை சுத்தி வருகிறான். ஆத்மியாவும் சிவகார்த்திகேயனும் அன்புடன் பழகுகிறார்கள். திடீரென ஒரு வீச்சரிவா மீசை மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஆத்மியாவை நிச்சயம் பண்ணுகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சிவா துடிதுடித்துப் போகிறான். தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்கிறான். தனக்கு நிச்சயம் ஆனதை காரணம் காட்டி விலகிப் போகிறாள் அவள். அவளையே நினைத்து குடி மயக்கத்தில் புலம்பும் சிவாவை ஆத்மியாவுடன் சேர்த்து வைக்க முடிவு செய்யும் நண்பர்கள் ஆத்மியாவை மயக்கமடையச் செய்து இருவரையும் கடத்திக் கொண்டு போகிறார்கள். கண்விழித்த ஆத்மியாவோ தனக்கு சிவா மீது காதல் இல்லை என்கிறாள். அவனோ அவள் தனக்கு வேண்டாம்... என்கிறான். இந்நிலையில் ஆத்மியா வீட்டில் அவர்களை வலைவீசி தேடுகிறார்கள். தொடர்ந்து வரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
மெரினா படத்திற்கு பிறகு முழு நீள கதாநாயகனாக வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் இவரை கலங்க விட்டிருக்கிறார்கள். அடுத்த பாதியில் இவர் களைகட்ட வைக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மியா. பெரும்பாலும் சேலைகளிலேயே வருவதால் அம்மனாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் கேர் பண்ணாத இவருடைய நடிப்பு அடுத்த பாதியில் ரொம்பவே ஸ்கோர் பண்ணுகிறார் ஆத்மியா.
சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களாக வருகிறார்கள் சூரி, சிங்கம்புலி வகையறா. சூரியும் சிங்கம் புலியும் கம்பெனி போட்டு அடிக்கிற லூட்டியில் தியேட்டர் அதிர்கிறது. இடைவேளையில் என்ட்ரி கொடுக்கும் சாம்சும் அவர் நண்பரும் வந்த பிறகு படம் விறுவிறுப்பாகவும் செம காமடியாகவும் நகர்கிறது. ஆத்மியாவையும் சிவகார்த்திகேயனையும் ஆத்மியாவின் அண்ணன் டீம் தேடும் போது சிங்கம் புலியையும் சூரியையும் அழைத்துக் கொண்டே போகும் இடமெல்லாம் செல்கிறார்கள். அவர்களிடம் வம்படியாக மாட்டிக் கொள்ளும் சாம்ஸ்... இந்த காட்சிகள் அரை நிமிடங்களுக்கு தொடர்ந்து வரும் காமெடியாக இருக்கிறது. டிங் டிங்... குத்துப்பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.
படத்தை இயக்கியிருக்கிறார் எழில். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எழில் இந்தப் படத்தின் மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார். காதல், காமெடி, கலாட்டா என வழக்கமான ஸ்டைல் கதை என்றாலும் இடைவேளை ட்விஸ்ட், மாறுபட்ட திரைக்கதை யுக்தியில் படத்தை வேறு பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் எழில்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “மனம் கொத்திப் பறவை - விமர்சனம்”
Post a Comment