இவளுங்க எல்லாம் நாசமாத்தான் போவளுங்க...
ஒரு மெல்லிய காதல் என்னுள் எட்டிப் பார்த்து முளையிலேயே கருகிப் போனது.
ஏற்கனவே ஒரு காதல் என்னுள் உருவாகி அது முழுவதும் கருகிப் போனதனால் ஏற்பட்ட என் மனதின் கவலைகள் மறக்கப்பட கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிப் போயின. மீண்டும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு என்னுள் ஒரு காதல் துளிர்விட்டது.
என் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்தேன். அப்போது குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பேச்சைத்தான் எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார்கள் என் அம்மாவும் சகோதரியும். தெரிந்த பெண்தான் அவள். என் அம்மாவிடம் அவள், ‘நான் இன்ஜினியரிங் 3 ஆம் வருடம் படிக்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடிஞ்சிரும்... அப்புறம் என்னை உங்க மகனுக்கு கட்டிக் கொடுங்க’ என்று சொல்லியிருக்கிறாள். என் சகோதரியிடம், ‘உங்க தம்பிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்குங்க...’ என்று சொல்லியிருக்கிறாள். இப்போது நான் ஊருக்கு போன போது என் சகோதரிக்கு போன் செய்த அவள் என்னிடமும் பேசினாள். ‘உங்களை ரொம்ப நல்லா பாத்துப்பேன்...’ என்று அவள் சந்தோஷமாய் சொன்னாள். அதைக் கேட்ட நேரத்தில் இருந்தே என் மனதில் சந்தோஷ பட்டாம்பூச்சிகள் சிறகு முளைத்து பறந்தன. ஒவ்வொரு கணத்தையும் ஒருயுகமாக நான் உணர்ந்தேன். அவளிடம் நான் பேசமாட்டேனா... என ஏங்கினேன். என் அம்மாவும் சகோதரியும் அவளைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டே இருக்க என்மனதில் அவள் இன்னும் அடி ஆழத்தில் இறங்கினாள். என் மனைவியாகவே அவளை நினைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் தூங்கினேன்.
என் சகோதரியின் மொபைலில் இருந்து அவள் எண்ணை தேடி எடுத்து அவளிடம் பேசினேன். ‘சொல்லுங்க...’ என்று அன்பாக துவங்கினாள் பேச்சை. கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவளிடம் பேசிய போதும் அது அரை நிமிடமாகவே எனக்கு தோன்றியது. அவள் அப்போது என் வேலை, அவள் படிப்பு எல்லாவற்றையும் பற்றி நிறைய பேசினாள். நான் படிக்கிற படிப்பு பொண்ணுதான் வேணும்னு சொன்னீங்களாமே... நான் அந்த படிப்புதான் படிக்கிறேன்... என்ற போது அவள் எனக்கு உதவியாக இருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.
அவள் வேறு சாதி நாங்கள் வேறு சாதி என்று வீட்டில் சொன்னார்கள். ஆனால், ‘எந்த சாதியாக இருந்தால் என்ன... எல்லாரும் மனுஷங்கதானே...’ என்று தத்துவத்தைப் பேசினேன் அவளுக்கு ஆதரவாக. அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தேன்.
இன்று அவளை சந்திப்பது என முடிவு செய்தேன். அதற்காக கிளம்பினேன். அவள் இருக்குமிடம் போவதற்கு இரண்டு பேருந்துகளைப் பிடித்துப் போக வேண்டும். அவள் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். பிஸியாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு மேல் பிஸி. ஒருவழியாக அவளை தொடர்பு கொண்ட போது, ‘தன் தோழி ஒருத்தி ஒரு பையனை லவ்வுகிறாள் என்றும்... அந்த காதல் அவள் வீட்டுக்கு தெரிந்து விட்டது. எனவே அதிலிருந்து தப்பிக்க தன் தோழியுடன் சேர்ந்து ஐடியா பண்ணுகிறோம்...’ என்று சொன்னாள். எனக்கு அதை நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. பேருந்தைப் பிடித்து முதல் பேருந்து நிலையத்தை அடைந்தேன்.
அதன் பிறகு அவள் மொபைலுக்கு கால் பண்ணினேன். எடுக்கவில்லை. மதிய நேரமாயிற்றே சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைத்தேன். மீண்டும் சிறிது நேரம் கழித்து மொபைலுக்கு முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது பார்த்து ஒரு மெசேஜ் வந்தது. ‘சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்... என்ன விஷயம்... சொல்லுங்க அண்ணா...’ என்று ஒரு மெசேஜ் வந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘என்னது... அண்ணாவா...?’ அதிர்ச்சியில் உடனே போனைப் போட்டேன்.
‘என்னம்மா எப்படி இருக்கே... அண்ணான்னு மெசேஜ் அனுப்பியிருக்கே...’ என்றேன் அதிர்ச்சியுடனே. ‘ஆமா... வயசுல பெரியவங்களை அண்ணான்னு கூப்பிடணும்... இல்ல... சார்ன்னு கூப்பிடணும்... நீங்க ரொம்ப நல்லா பேசுறதால உங்களை அண்ணான்னு கூப்பிடுறேன்... சொல்லுங்க அண்ணா’ என்று சொன்னாள். என் அதிர்ச்சி இன்னும் அதிகமாக அப்படியே கீழே சரிந்து விடுவேனோ என்று பயந்து போனேன். அவள் தந்த வேதனையைத் தாங்க முடியாமல் போனை கட் செய்தேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன். ‘இதுக்கு முன்னால யாருகிட்டயாவது இப்படி உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கியா...?’ என்று கேட்டேன். ‘இல்லை ஏன் கேக்கீறீங்க...’ என்றாள். ‘நீ என்கிட்ட என் அம்மா சகோரிகிட்ட பேசினதை எல்லாம் உண்மைன்னு நெனச்சி நம்பிட்டேன்... என் மனசை ஹர்ட் பண்ணின மாதிரி வேற யாருகிட்டயும் இப்படி பேசி அவங்க மனசை இனிமே விளையாட்டுக்குக்கூட ஹர்ட் பண்ணிடாத...’ என்றேன். ‘எக்ஸ்ட்ரீம்லி சாரி...’ என்றாள்.
இதற்கு மேலும் அவளைப் போய் பார்ப்பது சரி என்று என் மனதுக்கு தோன்றவில்லை. ஊருக்கு செல்லும் பேருந்தை தேடிப்பிடித்து உட்கார்ந்தேன்.
யார் இந்த பெண்...? ஏன் என் வாழ்வில் வந்தாள்... ஓரிரு நாட்களிலேயே என் மனதை முழுவதுமாக வசீகரித்தவள் இப்படி விளையாட்டுக்காய் சொல்வாள் என்று என் கனவில் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஏற்கனவே முதல் காதலில் என் உறவுக்கார பெண் 6 மாதங்கள் பழகிய பின்பு என்னை தூக்கி எறிந்துவிட்டுப் போனாள். இதோ அடுத்தவள் ஆறு நாட்களில் விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். என் வாழ்வில் நான் சந்தித்த என் மனதைத் தொலைத்த பெண்கள் எல்லாருமே என் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திச் செல்கிறார்கள். இதோ இவள் இப்போது பெரும் வேதனையை ஏற்படுத்திச் செல்கிறாள். அடுத்தவள் எப்போது வருவாளோ என் இதயத்தைத் திருடி அதை ஈட்டியால் குத்தி ரத்தத்தைக் குடிப்பதற்கு, நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.
மினி பஸ் உறுமிக் கொண்டு கிளம்பத் தயாரானது. டிரைவர் ஸ்பீக்கரில் பாட்டைப் போட்டார். ‘பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே... நம்பி விடாதே...’ என்று பாடியது பாடல்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுங்க பாஸ் ! ஆறு வருஷம் உருகி உருகி காதலிச்சதே போய்டுச்சு ! இதுக்குலாம் கலங்காதீங்க ... நல்ல பெண் உங்களுக்கு கிடைக்கும் ..
ReplyDeleteநன்றி இக்பால்...
Delete