பகல்கொள்ளையடிக்கும் சினிமா சங்கங்கள் - சேரன் அதிரடி



cheran009

“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ். சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது? என்பதில் தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை. திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏன்?

‘லாபத்தில் பங்கு’ என்பது தான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும் வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது. மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச்சொற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என் கடமையும், உரிமையும்.

இன்றைய இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும் விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இது மாற வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன சாப்பிட வேண்டும்? என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்
குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில் இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா? கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை! என்பதுதான்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று ஆளாளுக்கு ஓடி வந்தனர்.

ஆனால் இன்றென்ன நிலைமை?

ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது. திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி.. திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.

பல முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்?

அப்படித் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்? கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.
புவி வெப்பமயமாதல் அதிகரித்து, μசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக் கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது. கோமாஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள் தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால் கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். மேலும், வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில் தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை. ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா?

அதாவது, சினிமா - மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த நியாயம்?

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால், எதார்த்தம் என்ன? ஒரு படம் μடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஒளிப்பதிவாளர்களும், படத்தின் பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துத்தான் வாங்குகிறார். இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா!

நூறு கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம் தான். இது பாரபட்சமான அணுகுமுறை. பெரிய பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும். அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதுதான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.

சினிமா நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலை திரைப்படத் தொழிலார்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்? இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத் தான் தரவேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில் தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன்வைக்கிறது.

அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ·பெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?

தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,’ என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது.

பெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணிசெய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வரமுடியாது. இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை.

டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ·பெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!.

படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதைத் எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.

இயக்குனர் சேரன்,
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)

-------------------------------------------------------------------------------------
நண்பர்களே... http://www.hotlinksin.com திரட்டி இணையதளத்தில் இணைந்துவிட்டீர்களா...?
-------------------------------------------------------------------------------------
hotlinksin

0 Responses to “பகல்கொள்ளையடிக்கும் சினிமா சங்கங்கள் - சேரன் அதிரடி”

Post a Comment